×

பழநி நகரில் உள்ள லாட்ஜ்களில் வெளிநாட்டினர் தங்கினால் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் சப்.கலெக்டர் எச்சரிக்கை

பழநி, மார்ச் 17: பழநி லாட்ஜ்களில் வெளிநாட்டினர் தங்கினால் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென சப்.கலெக்டர் உமா எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவினால் சுமார் 1.60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய நாட்டில் நாளுக்குநாள் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு விட்டன.

நேற்று பழநி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. சப்.கலெக்டர் உமா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் லட்சுமணன், தாசில்தார் பழனிச்சாமி, பழநி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.உதயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, திருமண மண்டபம், தியேட்டர், வணிக வளாகம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோயில் நகரான பழநிக்கு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் இயக்கப்படுவதால் நாள்தோறும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டுமென அரசு மற்றும் தனியார் மேலாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், துணிக்கடைகள், தியேட்டர்கள், திருமண மண்டபங்களில் கிருமி நாசினிகளை அடிக்கடி பயன்படுத்தி சுத்தப்படுத்துமாறு எடுத்துரைக்கப்பட்டது. கூடுதல் விலைக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள் விற்றாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டது. கோயில் நகரம் என்பதால் லாட்ஜ்களில் வெளிநாட்டினர் யாராவது தங்கினால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், மில் தொழிலாளர்கள் உள்ளிட்டோரையும் சுகாதாரமாக கைகழுவி பணிகளில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.

Tags : foreigners ,lodges ,city ,Palani ,health department ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்