×

பிராய்லர் கோழி விற்பனை சரிவால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி

காங்கயம், மார்ச் 17: கொரானா மற்றும் பறவை காய்ச்சல் பீதியால் பிராய்லர் கோழிகளின் விற்பனை சரிந்ததால் கோழித்தீவனத்தின் முக்கிய மூலப் பொருளான மக்காச் சோளத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மக்காச்சோள விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம், குண்டடம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டு மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. மழைக்காலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டால் அதிகளவில் தண்ணீர் தேவையிருக்காது என்பதால் பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் மக்காச்சோளத் தட்டு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதால் பணப்பயிராக இல்லாத போதிலும் இதை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகரித்ததால் எதிர்பார்த்த மகசூல் இல்லாமல் போனது. இதனால் ஏற்பட்ட உற்பத்தி குறைவால் கடந்த ஆண்டு மக்காச்சோளத்தின் விலை அதிகரித்து ஒரு குவிண்டால் ரூ. 2 ஆயிரத்து 500 வரை விலை போனது. இதனால் இந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் கொண்டு அதிகளவில் மக்காச்சோளம் பயிரிட்டனர். அதே நேரம் இந்த ஆண்டு படைப்புழுக்களின் தாக்கமும் குறைந்ததால் விளைச்சலும் அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி முதல் அறுவடை தொடங்கியது. அறுவடை துவங்கிய சமயத்தில் ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. ஆயிரத்து 900வரை விற்பனையானது. கோழிப்பண்ணைகள் அதிகரித்து வரும் நிலையில் கோழித் தீவனத்தின் முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த மக்காச்சோள கதிர்களை அரவை செய்யாமல் குவியலாக போட்டு வைத்துள்ளனர். விலை உயர்ந்ததும் அரவை செய்து விற்பனை செய்துவிடலாம் என்று எண்ணியிருந்தனர்.இந்த நிலையில் உலக நாடுகளை கொரானா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் பிராய்லர் கோழிகள் சாப்பிட்டால் கொரானா பரவும் என சமூக வலைதளங்களில் யாரோ பீதியைக் கிளப்பி விட்டதாலும், கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாலும் பிராய்லர் கோழி விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.இதனால் பண்ணைகளுக்கு வளர்ப்பதற்காக கோழிகள் விடுவதை கோழி நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதனால் கோழித்தீவனத்தின் மூலப்பொருளான மக்காச்சோளத்திற்கான தேவை குறைந்துள்ளது. இதனால் மக்காச்சோளத்தின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தற்போது விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் உள்ளூர் வியாபாரிகள் குவிண்டால் ரூ. ஆயிரத்து 450க்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

இது பற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது, ஒரு ஏக்கருக்கு 30 குவிண்டால் மகசூல் கிடைக்கும். தற்போதைய விலையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 43 ஆயிரம் வருமானம் கிடைக்கும். ஆனால் செலவாக மக்காச்சோள விதை, உழவு, நடவு, கூலி, உரம், பூச்சி மருந்து, அறுவடை கூலி, அரவை கூலி, சோளத்தட்டு போர் போட கூலி என ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் செலவாகிறது. இப்போதைய விலையில் கூட்டி, கழித்து பார்த்தால் 4 மாதம் உழைத்ததற்கு எந்த பலனும் இல்லை, என்றனர்.
இது பற்றி பிரபல மக்காச்சோள மொத்த வியாபாரி கூறும்போது, கொரோனா பீதி மட்டும் கிளம்பாமல் இருந்தால் இந்நேரம் குவிண்டால் ரூ. 2 ஆயிரத்தை தாண்டியிருக்கும். மீண்டும் கொரானா மற்றும் பறவை காய்ச்சல் பீதியிலிருந்து மக்கள் விடுபட்டு கோழிகளின் விற்பனை சூடுபிடித்தால்தான் மக்காச்சோளத்தின் விலை உயரும். ஏற்கனவே கோழி நிறுவனங்கள் கணிசமான அளவு மக்காச்சோளம் வாங்கி இருப்பு வைத்துள்ளனர். தற்போது இந்த பீதி வேறு கிளம்பியுள்ளதால் மக்காச்சோளத்திற்கான தேவை கணிசமாக குறைந்துவிட்டது. அதனால் தற்போதைக்கு மக்காச்சோளத்தின் விலை உயர வாய்ப்பில்லை, என்றார்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா