×

கோவை அரசு மருத்துவமனையில் பக்கவாத பாதிப்புக்கு தனி ஐசியு

கோவை, மார்ச் 17: நாடு முழுவதும் சமீபகாலமாக பக்கவாத நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசு பக்கவாதத்துக்கான சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் தீவிரப்படுத்த அறிவுறுத்தியது. இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பக்கவாதத்துக்கான சிறப்பு சிகிச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தில் பக்கவாத நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், மாநில அரசு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ‘ஆல்டிபிளேஸ்’ எனும் ஊசியை இலவசமாக போட உத்தரவிட்டது. இதன் மூலம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் நிரந்தர கை, கால் செயலிழப்பை தவிர்க்க முடியும். மேலும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். இவர்களுக்கு சிறப்பு ஊசியை செலுத்தி ரத்த நாளத்தில் கட்டியினால் அடைப்பு ஏற்பட்டு இருந்தால், அதை கரைக்க முயற்சிக்கப்படும். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் தனியாக ஐசியு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 7 படுக்கை வசதி, வெண்டிலேட்டர், நவீன உபகரணங்கள் உள்ளது. இந்த வார்டு வரும் 26ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்தார்.

Tags : stroke victims ,Coimbatore Government Hospital ,
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...