×

கொரோனா வைரஸ் பீதியால் பின்னலாடை உற்பத்தி முடங்கும் அபாயம்

திருப்பூர், பிப்.17: கொரோனா வைரஸ் பீதியால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி 50 சதவீதம் வரை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் சார்பு நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் 30 சதவீதத்தினருக்கு மேல் பணிபுரிகின்றனர். தற்போது 6 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேல் புதிய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா, பிரதான் மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா போன்ற மத்திய அரசு திட்டங்களில், ஆடை உற்பத்தி திறன் பயிற்சி அளிக்கும் மையங்கள், வெளிமாநிலங்களில் அதிகம் செயல்படுகின்றன. இவை மூலம் பயிற்சி முடித்தோர், தினமும் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை தேடி ரயில்களில் திருப்பூர் வருகின்றனர். இவர்கள் ஆடை உற்பத்தி, நிட்டிங், டையிங் உள்ளிட்ட நிறுவனங்களில் சேர்ந்து பணிபுரிகின்றனர்.  இந்த நிலையில் ‘கொரோனா’ வைரஸ் பீதியால் திருப்பூருக்கு வெளி மாநிலங்களில் இருந்து புதிய தொழிலாளர் வருகை ெபருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஒடிசா தொழிலாளர் அதிகம் பணிபுரிகின்றனர். கொரோனாவால் ஒடிசா மாநில திறன் பயிற்சி மையங்கள் தொழிலாளர் பயிற்சியை 31ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளன. பாதுகாப்பு கருதி பயிற்சி முடித்த தொழிலாளர்களை திருப்பூருக்கு அனுப்பி வைப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால், வெளிநாட்டு வர்த்தகர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், தொழில்துறையினர் அங்கு செல்ல முடியாது. குறிப்பாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை. இதனால், ஆர்டர் ஒப்பந்தம் செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களுக்கு தைவான், தென்கொரியா, சைனா ஆகிய நாடுகளில் இருந்து உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், அதுவும் தற்போது பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கொரோனா வைரஸ் பீதியால், பல்வேறு வகையில், பின்னலாடை தொழில் பாதிப்படைந்து 50 சதவீதம் வரை உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...