×

கொரோனா பரவலை தடுக்க 31ம் தேதி வரை வெளிமாவட்டம் செல்வதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை

திருப்பூர், மார்ச்.17: கொரோனா பரவாமல் தடுக்க அண்டை மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் செல்வதை பொதுமக்கள் வரும் 31ம் தேதி வரை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை கூறினார்.
 கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது.  
 அப்போது கலெக்டர் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லை என்ற போதிலும், அண்டை மாநிலங்களிலிருந்து நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா நோய் நமது மாவட்டத்தில் பரவாமல் தடுக்க கேரள மாநில எல்லையான உடுமலை வட்டத்துக்கு உட்பட்ட சோதனைச்சாவடி அருகில் பல துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்பு குழுவினர் சோதனைச்சாவடி அமைத்து 24 மணி நேரமும் நோய் கண்காணிப்பு பணி மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
  அமராவதி சோதனைச்சாவடியில் இதுவரை 85 பேரை சோதனை செய்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிந்தது. மாநில எல்லையோரம் உள்ள வட்டங்களில் திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்களை வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும்.

இது தொடர்பாக, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.  பொது இடங்களில் குறிப்பாக, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து அத்தகைய நபர்களை, மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதைத் தடுக்கவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.   மாநகராட்சி வரையறைக்குள் உள்ள பகுதிகளை மாநகராட்சி அலுவலர்கள் மண்டலம் வாரியாக பிரித்தும், இதர பகுதிகள் தொடர்புடைய அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும், வெளிநாடுகள், மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு செல்வதை 31ம் தேதி வரை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தை பேணவும், குறிப்பாக வெளியில் இருந்து வீட்டிற்கு செல்லும்போது வீட்டில் நுழையும் முன்பாக கைகள் மற்றும் கால்களை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். இக்கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்க வேண்டும்.   குழந்தைகள் கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உள்ள பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுக வேண்டும்.   சமூக ஊடகங்களில்  பொது மக்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொது மக்களுக்கு இந்நோய் தொடர்பாக ஏதேனும் தகவல் வேண்டியிருப்பின் மாநில தகவல் மற்றும் கட்டுப்பாட்டு மையம் : 044 - 29510400, 29510500,  9444340496, 8754448477 திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் : 0421-1077, 0421 - 2971199. ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள்ளலாம்.   நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். இவ்வாறு கலெக்டர் விஜயகார்த்திகேயன் பேசினார்.   இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,corona spread ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...