×

ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலையில் அசுர வேகத்தில் இயக்கப்படும் டிப்பர் லாரிகள்

ஊட்டி,  மார்ச் 17:  நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பெரும்பாலான டிப்பர் லாரிகளில்  வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை அகற்றிவிட்டு லாரிகளை வேகமாக இயக்குதால்  அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.  கனரக வாகனங்கள் மற்றும் டேக்சி  போன்றவைகள் வேகமாக இயக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்து  ஏற்படுகிறது. அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் அடிக்கடி  விபத்தில் சிக்கி வந்தன. இதனால், வாகனங்களின் வேகத்தை குறைக்க அனைத்து  வாகனங்களுக்கும் தற்போது ஸ்பீடு கவர்னர்ஸ் எனப்படும் வேகக்கட்டுப்பாட்டு  கருவியை கட்டாயம் வாகனங்களில் பொறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  ஆண்டுதோறும் வாகனங்களுக்கு புதுப்பித்தல் சான்றிதழ் பெறும்போது, இந்த  கருவி இருந்தால் மட்டுமே எப்.சி. வழங்கப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான  வாகன ஓட்டுநர்கள் எப்.சி. காட்டும்போது மட்டுமே இந்த கருவிகளை வாங்கி  பொருத்திக் கொள்கின்றனர். எப்.சி. பெற்ற பின்பு அந்த கருவியை கழற்றி  வைத்துவிட்டு வழக்கம்போல், வேகமாக ஓட்டுகின்றனர். குறிப்பாக, லாரிகள்  மற்றும் டேக்சிகளில் இது போன்ற செய்யப்படுகிறது.  தற்போது, நீலகிரி  மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் மும்முரமாக  நடந்து வருகிறது. இதனால், தினமும் 50க்கும் மேற்பட்ட லாரிகள் ஊட்டி,  மஞ்சூர், குன்னூர் போன்ற பகுதிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜல்லி கற்கள், தார் கலவை மற்றும் கட்டுமான பொருட்களை எடுத்து வருகின்றன.

இங்கு  இயக்கப்படும் பெரும்பாலான டிப்பர் லாரிகளில் ஸ்பீடு கவர்னர் கருவியின்  செல்பாட்டை துண்டித்துவிட்டு வேகமாக இயக்குவதாக கூறப்படுகிறது. இதனால்,  இந்த லாரிகள் பகல் நேரங்களில் ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலைகளில் இரு  மார்க்கத்திலும் அசுர வேகத்தில் செல்கின்றன. இந்த லாரிகளை கண்டாலே மற்ற  வாகன ஓட்டுநர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள்  ஹாரன்களை அழுத்தி பிடித்துக் கொண்டு வேகமாக வாகனங்களை விரட்டிக் கொண்டு  செல்லும்போது சிறிய வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் அச்சப்படுகின்றனர்.  ேமலும், வாகனங்கள் மீது மோதி விபத்தும் ஏற்பட்டு வருகிறது.   ஊட்டியில்  இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இந்த டிப்பர்  லாரிகளின் அராஜகம் தொடர்கிறது. இதனை போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை  அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை. இதனால், மேலும் விபத்துக்கள் அதிகரிக்க  வாய்ப்புள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் மேட்டுப்பாளையத்தில் இருந்து  தார் கலவை மற்றும் இதர கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளில்  வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என சோதனை செய்ய வேண்டும்.  மேலும், இச்சாலையில் வேகமாக வாகனங்கள் இயக்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Ooty ,Tipper ,road ,Mettupalayam ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்