×

ஊட்டியில் தங்கும் விடுதிகளை மூட கலெக்டர் உத்தரவு

ஊட்டி, மார்ச் 17: கொரோனா வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் வரும் 31ம் தேதி வரை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி மக்களை அச்சத்திற்குள்ளாகியுள்ளது. இந்தியாவிலும் பலருக்கு இந்த தொற்று உள்ளதால், தற்போது பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா தலங்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களை வரும் 31ம் தேதி வரை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியாதவது: நீலகிரி மாவட்டத்தில் இது வரை கொரோனா வைரஸ் யாருக்கும் பாதிக்கப்பட்டதாக அறிகுறிகள் இல்லை. அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. அதேசமயம் வெளி நாடுகளை சேர்ந்த 3 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனாவிற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை.தமிழக அரசின் உத்தரவின் பேரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதபோல், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களும் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளை வைத்துள்ளவர்கள் வரும் 31ம் தேதி வரை எவ்வித முன்பதிவுகளை எடுத்துக் கொள்ள கூடாது என விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளை குழுக்களாக விளையாட அனுமதிக்க வேண்டாம். டாஸ்மாக் பார்கள் உட்பட அனைத்து பார்களும் மூட வேண்டும்.பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 3பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருவது தவறானது. வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மேலும், இது போன்ற தவறான தகவல்களை வாட்ஸ் அப் மூலம் பரப்புவதை தடுக்க வேண்டும், என்றார்.மேலும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு, காப்பகம் மூடப்பட்டுள்ளது.

Tags : Ooty ,
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...