×

முதுமலை வனத்தில் நள்ளிரவு அத்துமீறி ஜீப் சவாரி சுற்றுலா பயணிகளுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம்

ஊட்டி,  மார்ச் 17:   முதுமலை வனத்திற்குள் நள்ளிரவில் அத்துமீறி ஜீப் சவாரி  மேற்கொண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் டிரைவர்களுக்கு வனத்துைறயினர் ரூ.85  ஆயிரம் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள்  காப்பகம் 688 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள புலி,  சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளும், ஈட்டி, தேக்கு  பல்வேறு விலையுயர்ந்த மரங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளன. இங்குள்ள வனங்கள்  பாதுகாக்கப்பட்ட வனங்கள் என்பதால், காப்பு காடுகளுக்குள் அத்துமீறி  நுழைவது, டிரோன் போன்ற கேமராக்களை பறக்கவிட்டு படம் எடுப்பது போன்ற  செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுமலை  வெளிமண்டலத்திற்குட்பட்ட மசினகுடி அருகே சிலர் அனுமதியின்றி வாகனங்கள்  மூலம் நள்ளிரவில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக  வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.   இத்தகவலின் பேரில் மசினகுடி வனச்சரகர்  மாரியப்பன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 3  மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்போது 2 சவாரி ஜீப்களில்  கோவையை சேர்ந்த சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2 ஜீப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மசினகுடி பகுதியில்  உள்ள தனியார் விடுதி உரிமையாளர் யுவராஜ் அருள்குரூஸ் (33), ஜீப் டிரைவர்கள்  அன்வர் பாஷா(29), ஜெனித் (34) மற்றும் கோவையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 9  பேரை வனத்துறையினர் கைது செய்தனர். விடுதி உரிமையாளர் மற்றும் ஜீப்  டிரைவர்களிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரமும், சுற்றுலா  பயணிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரம் அபராதம் வசூல்  செய்யப்பட்டது.  முதுமலை புலிகள் காப்பக பகுதி பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதியாக விளங்கி வருகிறது. வனத்திற்குள் ஜீப் சவாரி செய்வது,  அத்துமீறி நுழைவது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மீறி நுழைந்தால்  வனசட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர்  தெரிவித்தனர்.

Tags : jeep ride ,Mudumalai ,forest ,
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்