×

வாடகை தராததை கண்டித்து நுகர் பொருள் வாணிப கழக குடோன் முன் லாரி உரிமையாளர்கள் சாலை மறியல்

அறந்தாங்கி, மார்ச்17:அறந்தாங்கி அருகே லாரி வாடகை தராததைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 5நாட்களாக நெல் மூட்டைகளை இறக்காமல் அலட்சியம் செய்வதாக உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டினர். சாலை மறியலால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களில் 16 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி அறந்தாங்கியை அடுத்த அழியாநிலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இறக்குவது வழக்கம். அங்கு மூட்டைகளை இறக்க இடமில்லாதபட்சத்தில், எரிச்சி அருகே திறந்த வெளி சேமிப்பு கிடங்களில் நெல் மூட்டைகள் இறக்கி பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படும். பின்னர் தேவைக்கு ஏற்ப நெல் மூடைகள் மீண்டும் லாரிகளில் ஏற்றப்பட்டு தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அடுக்குவதற்கு சில வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதனால் கீழே கட்டைகளை அடுக்கி அதன்மீது நெல் மூட்டைகள் அடுக்கப்படும்.இவ்வாறு அடுக்கினால்தான் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் காப்பாற்ற முடியும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து வர புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அவர் நெல்மூட்டைகளை ஏற்றி வரும் பணிக்காக அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட லாரிகளை ஒப்பந்தம் செய்துள்ளார்.இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்ட லாரிகளுக்கு, இந்த சீசன் தொடங்கிய ஜனவரி மாதம் முதலே இன்னும் ஒப்பந்தக்காரர் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கக் கூடிய கட்டைகள் இல்லை எனக் காரணம் கூறி கடந்த 12ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை ஏற்றி வந்த 60க்கும் மேற்பட்ட லாரிகளில் இருந்து, நெல் மூட்டைகளை இறக்காமல் அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.

கடந்த 5 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் இறக்கப்படாமல் இருந்ததால், லாரிகளின் டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின. இதனால் பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் அறந்தாங்கி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அடைக்கலம் தலைமையில், நிர்வாகிகள் லோகநாதன், பழனியப்பன் முன்னிலையில் நேற்று காலை அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், அழியாநிலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கிடங்கு முன்பு சாலையின் குறுக்காக நெல் மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அறந்தாங்கி தாசில்தார் சிவக்குமார், ஆர்.ஐ மதியழகன், அறந்தாங்கி எஸ்.ஐ சரவணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரி உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். லாரி உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Lorry owners ,road ,Consumer Goods Corporation ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...