×

போலி மழை நீர் சேகரிப்பு தொட்டி அதிகரிப்பு

கோவை, மார்ச் 17:கோவை மாவட்டத்தில் போலியான மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி கட்டிட வரைவு அனுமதி பெற்று விதிமுறை மீறுவது அதிகமாகி விட்டது.  கோவை மாவட்டத்தில் கடந்த 2002ம் ஆண்டில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அரசு, தனியார் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொட்டி கட்டவேண்டும். கல், மணல், வடிப்பான் என மூன்று நிலையில் நீர் சேகரித்து தெளிந்த நீரை தொட்டி அல்லது நிலத்தில் சேகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மழை காலங்களில் கட்டிடங்களின் மொட்டை மாடியில் தேங்கும் மழை நீரை வடிகாட்டி, நிலத்தடி நீர் தொட்டியில் சேகரிக்கலாம். மழை நீரை பயனுள்ள வகையில் சேகரிக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது. மாவட்ட அளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. நகர் பகுதியில் பொது இடங்கள், ரோட்டை சேதப்படுத்தி சிலர் மழை நீர் கட்டமைப்பு உருவாக்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. திட்டம் துவங்கிய ஓரிரு ஆண்டுகளில் மழை நீர் கட்டமைப்பில் தீவிரம் இருந்தது. பிறகு படிப்படியாக இந்த திட்டம் முடங்கியது. கடந்த 2013ம் ஆண்டில் மழை நீர் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டினால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்படும், சொத்து வரி, குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவித்தது. மழை நீர் தொட்டி அருகே வீட்டின் உரிமையாளர் நின்று போட்டோ எடுத்து அதை உள்ளாட்சி நிர்வாகத்தில் காட்டினால் மட்டுமே சொத்து வரி விண்ணப்பங்கள் ஏற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கழிவு நீர் தொட்டியில் குழாய் மாட்டி போலியாக மழை நீர் கட்டமைப்பை காட்டி பலர் கட்டிட அனுமதி மற்றும் சொத்து, குடிநீர் இணைப்பு பெற்று வருகின்றனர்.

பல அரசு கட்டிடங்களிலும் மழை நீர் கட்டமைப்பு முடங்கி விட்டது. மாவட்ட அளவில் வறட்சி, வெயில் தாக்கத்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது  குளங்கள், நீர் தேக்கங்கள் வறண்டு வரும் நிலையில் நீர் சேகரிப்பு தொட்டி திட்டம் கண் துடைப்பாக மாறி விட்டது. மாவட்ட அளவில் சுமார் 10 லட்சம் கட்டுமானங்களில் மழை நீர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் மொத்த கட்டமைப்புகளில் 100க்கு 5 வீடுகளில் கூட மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. மழை காலங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாக்கடையில் வீணாகி வருகிறது.  இதை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆய்வு செய்யவும், மழை நீர் கட்டமைப்பு உருவாக்கவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோவை மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவினர் கூறுகையில், ‘‘மாவட்ட அளவில் மழை நீர் சேகரிப்பு திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடம், காலியிடங்களுக்கு ஏற்ப மழை நீர் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அரசு கட்டிடங்களில் 100 சதுரடிக்கு அதிகமாக மழை நீர் கட்டமைப்பு உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு, அரசு சார்பு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக பயன்பாட்டில் உள்ளதா? என ஆய்வு செய்யப்படும். தனியார் கட்டிடங்களில் மழை நீர் தொட்டி கட்டினால் மட்டுமே வரி விதிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் கட்டமைப்பு தொடர்பாக அடிக்கடி ஆய்வு நடத்தப்படும், ’’ என்றனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்