×

பண்ணாரி சோதனைச் சாவடி, கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி தீவிரம்

சத்தியமங்கலம், மார்ச் 17: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில எல்லையில் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் உத்தரவின் பேரில் பண்ணாரி சோதனைச்சாவடியில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கணேஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களின் கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் கேரள மாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்களில் வருவோர் குறித்து விபரங்கள் சேகரிப்பதுடன் காய்ச்சல் அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதிகளில் உள்ள தடுப்புக்கம்பி கைப்பிடிகள், கோயிலின் முன்பகுதியில் குண்டம் அமைந்துள்ள இடம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
பண்ணாரி சோதனைச் சாவடியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி 24 மணி நேரமும் நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pannari ,checkpoint ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...