×

பெருந்துறை அருகே காதல் மனைவியை கடத்திய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார்

ஈரோடு, மார்ச் 17: திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் காவிலிபாளையம் முதல் வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (26). இவரும், பெருந்துறை அருகே ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ரகுபதி மகள் மௌனிகா (24) என்பவரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், தனது காதல் மனைவியை அவரது உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாக நவநீதகிருஷ்ணன் நேற்று தனது உறவினர்களுடன் வந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:நான் பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும்போது மௌனிகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். இதுதொடர்பாக, திருப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இருதரப்பையும் அழைத்து விசாரித்து எங்களுக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்து விட்டு சென்றனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி மௌனிகாவின் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என போனில் பேசினர்.

இதனால், நானும், எனது மனைவியும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனைக்கு வந்தபோது எனது மனைவியின் சித்தப்பா மற்றும் அவரது உறவினர்கள் என்னை தாக்கி விட்டு எனது மனைவி அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்து எடுத்து விட்டு அவரை காரில் கடத்தி சென்று விட்டனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கடந்த 10ம் தேதி மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தோம். எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது. எனது மனைவியை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags : relatives ,kidnapping ,collector ,Perundurai ,
× RELATED வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச...