சென்னிமலை அருகே 6 ஆடு, மாடு மர்மச்சாவு

சென்னிமலை, மார்ச் 17: சென்னிமலை அருகே 6 ஆடுகள், ஒரு மாடு மர்மமான முறையில் இறந்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (59). விவசாயி. இவர், அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் 25க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளையும், 2 மாடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை தோட்டத்தில் உள்ள பட்டியில் சென்று பார்த்தபோது ஒரு ஆடு மட்டும் மயங்கி கிடந்தது. இது குறித்து சுப்பிரமணியம் சென்னிமலை அரசு கால்நடை மருத்துவர் நல்லசாமிக்கு தகவல் கொடுத்தார்அவர் வந்து பரிசோதித்து பார்த்தபோது ஒன்றன் பின் ஒன்றாக 6 ஆடுகளும் இறந்தன. அதன்பின், அருகில் கட்டியிருந்த ஒரு மாடும் இறந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் பரிசோதித்து பார்த்தபோது கால்நடைகள் இறந்ததற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர்கள் வந்து தோட்டத்திலேயே கால்நடைகளை உடற்கூறு பரிசோதனை செய்தனர். முக்கிய உறுப்புகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அறிக்கை வந்த பிறகுதான் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் இறந்ததா? அல்லது ஆடு, மாடு குடித்த தண்ணீரில் விஷம் கலந்ததா? என தெரியவரும். கால்நடைகள் அடுத்தடுத்து இறந்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories:

>