×

சுருக்குமடி வலைகளை தடை செய்ய எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை

நாகை,மார்ச் 17: சுருக்கு மடி வலைகளை தடைசெய்யக் கூடாது என வலியுறுத்தி 54 கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற் பட்டது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று டிஆர்ஓ இந்துமதி தலைமையில் நடந்தது. இதில் வந்த மனுக்கள்:நாகை மாவட்டம் பழையாறு முதல் செருதூர் வரை உள்ள 54 கிராமத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த டிஎஸ்பி முருகவேலு தலைமையிலான போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் ஒரு சிலர் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர்.

கடந்த 20 ஆண்டுகளாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதே போல் நாங்களும் சுருக்குமடி வலை கொண்டு ஒவ்வொரு விசைப்படகிற்கும் 60 நபர்கள் சேர்ந்து கூட்டாக மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். இத்தொழில் தமிழகத்தில் நாகை, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களும் இத்தொழில் செய்து வருகிறோம். அரசுக்கு அன்னிய செலவாணி ஈட்டித்தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறோம்.

எனவே சுருக்குமடி வலையை பயன்படுத்தி இத்தொழிலை நிரந்தரமாக செய்ய அனுமதி தர வேண்டும். தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கட்டுப்பாடு இல்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் அரசு அதிகாரிகள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி தர மறுக்கின்றனர். இது அரசினால் அறிவிக்கப்பட்ட 1983ம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கொள்கை முடிவு என்று தெரிவிக்கின்றனர். இந்த கொள்கை முடிவில் மாற்றம் செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் மீனவர்கள் நிரந்தரமாக சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்வது போல இங்கும் அனுமதி தர வேண்டும். நாகை மாவட்டத்தில் மட்டும் பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன் கம்பெனி போன்ற நிலையங்களில் மீன் தூக்கும் பெண் தொழிலாளர்கள் மற்ற தொழில் செய்வோர் என்று 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசிடம் தெரிவித்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி பெற்று தர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மணல் அள்ள அனுமதி கோரி மனு;
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து டயர் மாட்டு வண்டி உரிமையாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் வாழும் மக்களும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இந்த நிலையில் இங்கு டயர் வண்டிகள் 60 முதல் 70 வரை உள்ளது. அதற்குரிய மாடுகளும் உள்ளது. எங்களுக்கு விவசாய வேலைகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. எனவே அன்றாட பிழைப்புக்கு வழியின்றி தவித்து வருகிறோம். இந்த காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிறு சிறு கட்டுமான வேலைகளுக்கு மண் எடுத்து வந்து விற்பனை செய்து வந்தோம்.

ஆனால் தற்போது மணல் எடுப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் பிழைப்பு இல்லாமல் தவித்து வருகிறோம்.இதனால் குடும்பம் நடத்த முடியாமலும், எங்களது குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும் தவிக்கின்றோம். எங்களுக்கு நிரந்தரமாக வருவாய் தரக் கூடிய சொத்துகள் எதுவும் கிடையாது. டயர் வண்டி மற்றும் மாடுகள் ஓடினால் தான் சாப்பாடு என்ற அவல நிலையில் உள்ளோம். எனவே நாங்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து எங்களுக்குரிய டயர் வண்டிகளில் சிறு அளவில் மண் எடுத்து அதனை விற்பனை செய்ய தனி குவாரி அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Fishermen ,anti-collector ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...