வேதாரண்யம் வண்டுவாஞ்சேரியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு பாராட்டு விழா

வேதாரண்யம், மார்ச் 17: வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு நன்றி பாராட்டு விழா நடைபெற்றது. வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி கிராமத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையம், உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வரால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு நேற்று நன்றி பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாண் கூட்டுறவு சங்கத்தலைவர் குஞ்சாலை மரைக்காயர் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், கூட்டுறவு சங்கங்களின் மாவட்டத் தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது. காலமெல்லாம் உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருவதை கருத்தில் கொண்டுதான் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. உணவுப்பொருள் பதப்படுத்தும் பூங்காவின் நோக்கம், விவசாய விளை பொருட்களை தரம் வாய்ந்த மறு தயாரிப்பு பொருளாக மாற்றி அவற்றின் மதிப்பை அதிகரிக்க செய்வதாகும். உணவுப்பூங்கா,வேளாண் ஆராய்ச்சி நிலையம் தொடர்பானஅரசின் அறிவிப்புகள் செயலாக்கம் பெற அனைத்து நடவடிக்கைகளும் வேகப்படுத்தப்படும்.

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆயக்காரன்புலத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது தொடர்பாக நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் இரண்டாயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்த வரையில் தமிழக அரசு மிகச்சரியானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுத்து வருவதால் அதன் பாதிப்பு மற்ற இடங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாக உள்ளது என்றார்.விழாவில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சோழன், திலீபன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அறிவழகன் மற்றும் ஊராட்சிஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>