×

முதல்வர் பட்டா வழங்கிய இடத்தை அளந்து தருவதில் அதிகாரிகள் மெத்தனம்

தென்காசி, மார்ச் 17: தென்காசியில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ. பழனிக்குமார், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் மரகதநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தாசில்தார்கள், வருவாய் துறையினர், நகராட்சி, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், யூனியன் அதிகாரிகள், கல்வித் துறை, வனத்துறை, காவல்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் கடையம் ஆர்த்தி, தென்காசி ஒன்றிய தவசிமுத்து, நகர செயலாளர் சுப்பிரமணியன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரீகன், செங்கோட்டை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சந்திரா, ஆலங்குளம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராணி சண்முகம் ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில்,செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்களுக்கு கட்டணமாக ரூ.725ம், வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்களுக்கு கூடுதல் கட்டணம் சேர்த்து ரூ.875 வசூலிக்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியாக குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும்.

மேலும் செங்கோட்டையிலிருந்து ஆய்க்குடி, சுரண்டை, சங்கரன்கோவில், வழியாக சென்னைக்கு தடம் எண் 290 என்ற அரசு விரைவு பேருந்து சுமார் 35 ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் இயங்கி வந்தது. இது தற்போது இயக்கவில்லை. இந்த வழித்தடத்தில் இயங்கும் ஒரே அரசு விரைவு பேருந்து இதுதான். சுரண்டை, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட தனியார் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே தடம் எண் 290 என்ற அரசு விரைவுப் பேருந்தை மீண்டும் முன்பு இங்கே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.தமிழ் புலிகள் கட்சியின் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் தமிழ்க்குமரன் அளித்துள்ள மனுவில், அரியப்பபுரம் ஊராட்சி ஒன்றியம் அருந்ததியர் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தனி சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டும். அரியப்பபுரம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் தேவை எனஅரசால் 2017 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. சொந்த தொழிலாக பீடி சுற்றும் தொழிலை செய்து வந்த 15 பேர் அந்த தொழிலை கைவிட்டு அரியப்பபுரம் ஊராட்சியில் அப்போது பணியில் சேர்ந்தனர். அரசு தினக்கூலியாக 200 ரூபாய் வழங்கியது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக 100 ரூபாய் குறைத்துள்ளனர். எனவே தினக்கூலியாக ரூ.250 உயர்த்தி வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

ஆலங்குளத்தை அடுத்த நல்லூரை சேர்ந்த பொதுமக்கள் பாஜ நகர தலைவர் சிம்சன் தலைமையில் அளித்துள்ள மனுவில், ‘ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் நத்தம் புல எண் 1146/2 Fல் நத்தம் புறம்போக்கு நிலத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லையில் நடந்த விழாவில் வைத்து 89 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தில் உடை மரம் உள்ளது. இதுகுறித்து மனுக்கள் கொடுத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. நெல்லை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வருவாய்த் துறையினர் நடத்திய சமாதான கூட்டத்தில் அந்த இடத்துக்கு பதிலாக மாற்று இடம் தருவதாக தெரிவித்தனர்.  ஆனால் இதுவரை வேறு இடமும் தரவில்லை. எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு அந்த இடத்தில் உள்ள உடை மரத்தை அகற்றி பட்டா இடத்தினை அளந்து தரவேண்டுமென கூறியுள்ளனர்.கடையநல்லூர் ஒன்றியம் ஊர்மேலழகியான் அதிமுக கிளை கழக மேலமைப்பு பிரதிநிதி பூதத்தான் அளித்துள்ள மனுவில், ‘சுரண்டையிலிருந்து திருமலைக்கோயிலுக்கு  ஊர்மேலழகியான், கண்டுகொண்டான் மாணிக்கம், செம்பூர் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும். செங்கோட்டை முதல் இருக்கன்குடிக்கு குற்றாலம், தென்காசி, ஊர்மேலழகியான், சேர்ந்தமரம், வீரசிகாமணி, சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் மோகன், பொதுச் செயலாளர் சின்னசாமி, பொருளாளர் செல்வம் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் திடக்கழிவு ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு 2020ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியம் தமிழக அரசின் அரசாணைப்படி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். கடையநல்லூர் தாலுகா போகநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி, காளிராஜ் அளித்துள்ள மனுவில், எங்களுடைய முகவரிகள் அனைத்தும் போகநல்லூர் கிராமத்தில் உள்ளது. நாங்கள் கட்டியிருக்கும் வீட்டின் சர்வே எண் அரியநாயகிபுரம் கிராமத்து எல்லையில் உள்ளது. ஆகையால் அரசு நலத்திட்ட உதவிகள் எதுவும் பெற முடியவில்லை.  குடிதண்ணீர், தெருவிளக்குகள் பழுதடைந்தால் கிராமத்தில் முறையிடவும் முடியவில்லை. எனவே எங்களின் சர்வே எண்களை போகநல்லூர் பஞ்சாயத்தில் இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமைச்செயற்குழு உறுப்பினர் வேலாயுத பாண்டியன் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் பரந்து கிடந்த விவசாய நிலங்கள் அழிந்து இன்று கட்டிடங்களாக மாறிவிட்டன. காசிமேஜர்புரம் போன்ற மற்ற கிராமங்களில் மட்டுமே சிறிய அளவு விவசாயங்கள் இன்றும் நடைபெற்று வருகிறது. எங்கள் ஊரில் உள்ள விவசாயத்திற்கு ஒரு பகுதி நீராக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் மௌனகுரு சாமி மடத்தின் பின்புறமாக வந்து செண்பக கால்வாய் வழியாக எங்கள் ஊரின் ஒரு பகுதி விவசாயத்திற்கு வருகிறது. மீதமுள்ள தண்ணீர் சிற்றாற்றில் கலக்கிறது.

ஆனால் கொஞ்ச காலமாகவே ரியல் எஸ்டேட் மற்றும் பாசன பகுதி ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் செண்பக கால்வாய் பாசனம் அழிந்து விவசாயத்திற்கு வரும் தண்ணீர் தடை படுகிறது. சுமார் 4 அடி அகலமும், ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் உள்ள கால்வாயில் பெரும் பகுதியை சரள் மண் போட்டு மூடி வைத்துள்ளனர். இதனால் தண்ணீர் வரத்து இல்லாமல் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பாளர்களால் தொலைந்து போன செண்பக கால்வாயை கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இருந்து விவசாய பாசன கால்வாயை மீட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக சிவகிரி தாலுகா நெல் கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், 8 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையும், புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட 28 பயனாளிகளுக்கு பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் வேலை தொடங்குவதற்கான ஆணையும் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உத்தரவின்படி  தென்காசி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜுனைத்துல் பிர்தெளஸ் தலைமையில் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடந்தது. இதனை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டார். முகாமில் காய்ச்சல், சளி, இருமல் நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் ரகுபதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு, சுகாதார ஆய்வாளர் கார்த்திக் பங்கேற்றனர்.நகரின் பல பகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடந்த அரங்கிலும் நகராட்சி ஆணையாளர் ஹசீனா உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சிவா, கைலாசசுந்தரம் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் மூலம் கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

Tags : Patta ,space ,
× RELATED நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை வழியாக...