×

கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை பொதுஇடத்தில் கூடுவதை மக்கள் 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்

தூத்துக்குடி, மார்ச் 17: கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டுமென கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டு உள்ளார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் நோய் பாதிப்பு முற்றிலுமாக தடுத்திட பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இன்னும் 15 தினங்களுக்கு  பொதுஇடங்களில் கூடுவதை முற்றிலுமாக தவிர்ப்பதுடன், தேவையில்லாத  விழாக்களையும் தவிர்த்திடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பொதுமக்கள்  முன்னெச்சரிக்கை அடிப்படையில் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும்,  தேவையில்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கவும்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசு, தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள்  போன்ற பொதுமக்களின் பயன்பாட்டிற்கான அனைத்து வாகனங்களையும் தினமும்  முழுமையாக சுத்தம் செய்திட அதன் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், உணவு விடுதிகளிலும் இதுமாதிரியான  பணிகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இப்பணிகளை  சுகாதாரத்துறையினர் கண்காணித்தும் வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு திரும்பிய 48 பேர், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலேயே இருந்து வருகின்றனர். இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும், அறிகுறியும் இல்லை. கொரோனோ  வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தூத்துக்குடி  அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக  மருத்துவமனையின் ஒரு கட்டிடப்பகுதி முழுவதும் இதற்கான சிகிச்சைக்கு என தனியாக  ஒதுக்கப்பட்டு தேவையான மருந்துகள், மருத்துவ கருவிகள் தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் இதற்கான லேப் வசதியும்  செய்யப்பட்டுள்ளது. முக்கியமான பிரச்னை  என்றால் மட்டும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனு  கொடுத்திட அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த வைரஸ் தொடர்பான தேவையில்லாத  வதந்திகளை நம்ப வேண்டாம். அவற்றை பரப்பிட வேண்டாம். காய்ச்சல், இருமல், சளி  அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை  அணுகி சிகிச்சை பெற வேண்டும். அங்கன்வாடி  குழந்தைகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இதுவரை  வரவில்லை. கைகளை அனைவரும் சுத்தமாக வைக்க ஏதுவாக பள்ளிகள்,  மருத்துவமனைகள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் கை கழுவுவதற்கு தேவையான  தகுந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

திருச்செந்தூர் கோயிலில் கிருமிநாசினி தெளிப்பு
தூத்தக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும், பேருராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரைப்படியும் திருச்செந்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம் மற்றும் பக்தர்கள் வரிசையில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடி கம்பிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், மேஸ்திரி சின்னத்துரை, கோயில் கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோர் பணியை கண்காணித்தனர். கிருமிநாசினி தெளிப்பு பணியில் பேரூராட்சி துப்பரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.இதேபோல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆணைப்படி, நெல்லை உதவி இயக்குநர் அறிவுரையின் பேரில் ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிறுத்தம், ஆட்டோ நிறுத்தம், அரசு, தனியார் பஸ்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தௌிக்கப்பட்டது. இப்பணியை பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஆனந்தன், சுகாதாரா ஆய்வாளர் மகராஜன், சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வை செய்தனர். கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாசரேத் பேரூராட்சி, உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நாசரேத் பஸ் நிலையம், பஸ்கள் மற்றும் கடைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. சுகாதார ஆய்வாளர் பால்ஆபிரகாம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : corona spread ,
× RELATED ஜேஎன்.1 வகை கொரோனா பரவலா? பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்