×

சேர்வைக்காரன்மடம் பகுதியில் கோர்ட் உத்தரவு மீறி நிலத்தடி நீரை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி, மார்ச் 17: சேர்வைக்காரன்மடம்  மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள  சேர்வைக்காரன்மடம், சிவஞானபுரம், கட்டாலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  விவசாயிகள் வேல்சாமி, சேகர், குணபாலன், அழகேசன், சின்னராசா, துரை, பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் சிவஞானபுரம் வெற்றிவேல், சரவணன், பூராசா தலைமையில் மாவட்ட கலெக்டர்  சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சேர்வைக்காரன்மடம்,  சிவஞானபுரம், கட்டாலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில்  நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டு வாழை, வெற்றிலை, தென்னை, மஞ்சள் போன்ற விவசாய சாகுபடி பணிகள் காலம்காலமாக நடைபெற்று வருகிறது. இதனை நம்பித்தான்  இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், எங்கள்  பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான எண்ணிக்கையில் தனியார் தண்ணீர்  விற்பனையாளர்கள் பல ஆயிரம் அடி ஆழத்தில் போர்வெல்(ஆழ்துளை கிணறு) அமைத்து  தண்ணீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். இந்த போர்வெல்களில் ராட்சத  மோட்டார்கள் மூலமாக தினமும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்து  தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தினமும் அதிகப்படியான  நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் எங்கள் கிராமங்களில் விவசாயம்  முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அழிந்து வருவதுடன், வீடுகளில் உள்ள போர்வெல்களில்  கூட போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை தொடர்ந்து வருகிறது.  இதுதொடர்பாக நாங்கள் பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை  அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகளான  நாங்களே வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் அனுமதியின்றி செயல்படும்  போர்வெல்களை மூடி சீல் வைத்திட நீதிமன்றம் விதித்த உத்தரவின் அடிப்படையில்  அரசுத்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிகளிலுள்ள சில போர்வெல்களுக்கு மட்டும்  மூடி சீல் வைத்துள்ளனர். கண்துடைப்பு என்ற ரீதியில்  நடத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஒருபக்கம் இருந்தாலும் இன்னும்  அனுமதியில்லாத ஏராளமான தனியார் போர்வெல்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  அதோடு அதிகாரிகள் சீல் வைத்த போர்வெல்களை உடைத்தும், புதிதாக  அப்பகுதிலேயே போர்வெல்கள் அமைத்தும் தண்ணீரை தொடர்ந்து உறிஞ்சி எடுத்து  வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை மீறுவதுடன், அரசுத்துறை அதிகாரிகள்  வைத்துள்ள சீலை உடைத்தும், முறையான அனுமதி எதுவும் இல்லாமல் செயல்பட்டு  வரும் அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் தாமதமின்றி மூடிட வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது காவல்துறை  மூலமாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதுடன் விவசாயிகள்,  பொதுமக்கள் அனைவரையும் திரட்டி தொடர் போராட்டங்களை மேற்கொள்வோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : sellers ,
× RELATED லாட்டரி விற்ற இருவர் கைது