×

மீனவர்களை சந்திக்க தூதரக அதிகாரிகள் நேற்று செல்லவில்லை ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்டு வருவதில் தொடர்ந்து தாமதம்

நாகர்கோவில், மார்ச் 17: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர்.  இதில் சுமார் 700க்கும் அதிகமான மீனவர்கள் கீஷ், கங்கன், லவான், மொகம், சேறோ, சிருயேஹ், புஷ்கர், சாரக், அல்சூர் போன்ற பகுதிகளில் உள்ளனர்.  இவர்களை உடனடியாக மீட்டு தாயகம் கொண்டு வரவேண்டுமென இவர்களது உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். முதல்வர், மத்திய அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோரையும் சந்தித்து மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் இது வரை நடவடிக்கைகள் தாமதமாகவே இருந்து வருகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். ஈரானிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், “இம்மீனவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்ய தூதரகம் ஆயத்தமாகி வருகிறது’’ என்று பதிலளித்திருந்தனர்.

ஆனால் இந்தியாவிலிருந்து ஈரான் சென்றுள்ள மருத்துவக் குழுவினர் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பது தெரியவருகிறது.  எனவே, போதிய மருத்துவக் குழுவை அனுப்பி, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு  இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டுமென மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கும், ஈரானிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் ஜஸ்டின் ஆன்டணி மீண்டும் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பான அவர் அனுப்பியுள்ள மனுவில், ‘யாருடைய உதவியும் அற்ற நிலையில் ஈரானில் உள்ள மீனவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்திய மீனவர்களை எந்தவொரு அதிகாரியும்  சந்தித்து ஆறுதல் கூறவோ அல்லது உணவு, குடி தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை செய்துகொடுக்கவோ இதுவரையும் முன்வரவில்லை.  மேலும் மீனவர்களை பார்க்க மார்ச் 16ம் தேதி வருவதாக தெரிவித்த தூதரக அதிகாரிகள், கடைசி நேரத்தில் தங்களது வருகையை மாற்றியுள்ளனர். மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தூதரக அதிகாரிகளைக்கொண்டு செய்து கொடுக்கவும், உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்தி மீனவர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப,  போர்க்கால அடிப்படையில் நீங்கள் செய்யும் உதவி இம்மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று ஜனாதிபதி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Embassy officials ,fishermen ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...