×

குமரியில் கொரோனா பீதி எதிரொலி நோயாளிகள், பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்த பின்னரே மருத்துவக்கல்லூரிக்குள் அனுமதி

நாகர்கோவில், மார்ச் 17 : கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 2 தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பீதியால், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து கணவன், மனைவி உள்பட 5 பேர் வந்தனர். அவர்களுக்கு எந்த வித அறிகுறியும் இல்லாததால் தொடர்ந்து இரு வாரங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கூறி அனுப்பி வைத்தனர். கென்யா மற்றும் சீனாவிற்கு சென்ற கப்பலில் பணியாற்றி ஊருக்கு திரும்பிய குளச்சல் வாணியக்குடியை சேர்ந்த 26 வயது வாலிபரும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் அவருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்தது.

கடந்த இரு நாட்களுக்கு முன் 26 வயது இளம்பெண் மற்றும் அவரது 2 வயது மகள் ஆகியோர் ெகாரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மஸ்கட்டில் இருந்து வந்த அவர்களுக்கு சளி, இருமல் இருந்ததால் அதன் மாதிரிகள் பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரியில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் டிஸ்சார்ஜ் ஆனார்கள். தற்போது வரை 8 பேருக்கு கொரானோவுக்கான பரிசோதனை நடந்துள்ளது. அனைவருக்கும் பாதிப்பு இல்லை என்று தான் வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் 28 வயது வாலிபர் ஒருவர், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய அவருக்கு சமீபத்தில் சளி, இருமல் உள்ளதால் சந்தேகத்தின் பேரில் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தற்போது திருநெல்வேலியில் பரிசோதனை செய்வதற்கான வசதி வந்து விட்டதால், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்பட பொதுமக்கள் அனைவருக்கும் கைகளை சுத்தம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மருத்துவக்கல்லூரியில் உள்ள இரு நுழைவு வாயில்களில் பயிற்சி டாக்டர்கள், மாணவ, மாணவிகள் இருந்து கைகளை சுத்தம் செய்வதற்காக சோப்பு, திரவம் வழங்கி கைகளை சுத்தம் செய்ய வலியுறுத்தினர்.

எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் பொதுமக்களுக்கு விளக்கினர். பைக், கார்களில் சென்றவர்களையும் மறித்து கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதித்தனர். இதற்காக சோப்புகள், திரவம் மற்றும் தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சியை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி தொடங்கி வைத்தார். கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், டாக்டர்கள் காவேரி கண்ணன், ரெனிமோள், விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலையில் மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து கொச்சி விமான நிலையம் வழியாக கடந்த 8ம் தேதி வருகை தந்தவர், நேற்று மாலை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவரது சளி பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : hall ,Kumari ,
× RELATED கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்...