×

சேலம் மாநகரில் தொடர் கைவரிசை கோயில்களில் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கும்பல் கைது

சேலம், மார்ச் 17: சேலத்தில் தொடர்ந்து கோயில்களின் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம், பூஜை பொருட்களை போலீசார் மீட்டனர். சேலத்தில் தொடர்ந்து கோயில் உண்டியலை குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல் களம் இறங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக 7 கோயில்களில் கைவரிசை காட்டிய கும்பல், 3வது நாளான நேற்றும் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்றது. சேலம் கொண்டலாம்பட்டி பக்கமுள்ள காட்டூர் சக்தி மாரியம்மன் கோயிலுக்குள் நேற்று அதிகாலை 2 மணிக்கு புகுந்த ஆசாமிகள், கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதன் அருகே உள்ள காந்திநகர் மாரியம்மன் கோயில் உண்டியலையும் உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.

கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து, கொள்ளையடிக்கப்பட்ட கோயில்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 2.30 மணியளவில், கோயிலுக்கு வரும் 3 நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. முன்னதாக 12.30 மணியளவில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பிறகே, இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதேபோல், நேற்று முன்தினம் மணியனூர், சிவசக்திநகர், கே.பி.கரடு வடபுறம் உள்ள கோயில்களில் சாமி கழுத்தில் கிடந்த தாலி மற்றும் தோடு, குத்துவிளக்கு, உண்டியல் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். இக்கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தனிப்படைகளை அமைத்தார். துணை கமிஷனர் செந்தில் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பூபதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுந்தராம்பாள், எஸ்ஐக்கள் ராமகிருஷ்ணன், சம்பத், ராஜேந்திரன், குமார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கொண்டலாம்பட்டி கோயிலில் கிடைத்த சிசிடிவி பதிவை கொண்டு விசாரித்ததில், இக்கொள்ளையில் கிச்சிப்பாளையம் மற்றும் எஸ்எம்சி லைன் பகுதியை சேர்ந்த 7 பேர் கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. அக்கும்பலான வேலுச்சாமி (21), செல்லப்பா (23), தனுஷ் (21), அருள்குமரன் (19), கதிரேசன் (19), நந்தகுமார் (23), விமல்குமார் (20) ஆகிய 7 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ₹8 ஆயிரம் உண்டியல் பணம், தங்க தாலி, தோடு, 2 குத்துவிளக்கு ஆகியவற்றை மீட்டனர். கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.  பிடிபட்ட 7 கொள்ளையர்களிடமும் துணை கமிஷனர் செந்தில் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், அவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டினார். கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : robbery ,Salem ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...