×

நகைக்கடை, பங்களாக்களில் கைவரிசை காட்டும் வட மாநில கொள்ளை கும்பல் ஊடுருவல்

சேலம், மார்ச் 17: நகைக்கடை, பங்களாக்களில் கைவரிசை காட்டும் வட மாநில கொள்ளை கும்பல், சேலத்திற்குள் ஊடுருவி இருப்பதாக போலீஸ் துணை கமிஷனர் கூறினார். சேலம் அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள கோயில்களில் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி நேற்று, மாநகர போலீஸ் துணை கமிஷனர் செந்தில், நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாநகரில் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் அடுத்தடுத்த நாட்களில் உண்டியல் உடைப்பு, சாமி சிலைகளில் இருந்த நகை திருட்டு உள்ளிட்டவை நடந்துள்ளது. இக்கொள்ளையில், 2 கும்பல் ஈடுபட்டதை கண்டறிந்துள்ளோம். ஒரு கும்பலை சேர்ந்த 7 பேரை தற்போது கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளோம். மற்றொரு கொள்ளை கும்பல் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அக்கும்பலை இரண்டொரு நாளில் பிடித்து விடுவோம்.

தமிழகத்தில் உள்ள பெரிய நகைக்கடைகள், நிதி நிறுவனங்கள், பங்களாக்களில் கொள்ளையில் ஈடுபடும் நோக்கத்துடன், வட மாநில கொள்ளை கும்பல் வந்துள்ளது. அந்த கும்பல், சேலத்திற்குள் ஊடுருவி இருப்பதை கண்டறிந்துள்ளோம். கூண்டோடு, அந்த வட மாநில கொள்ளையர்களை பிடிக்க நெருங்கினோம். ஆனால் அவர்கள், வேறு மாவட்டத்திற்கு தப்பி விட்டார்கள். அந்த மாவட்ட போலீசாரை உஷார்படுத்தி, தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம்.
சேலத்திற்குள் ஊடுருவிய வட மாநில கொள்ளையர்கள், ஏற்கனவே தமிழகத்தில் பெரிய அளவில் கைவரிசை காட்டியவர்கள். அதனால். அவர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களை கைது செய்வோம். அதேபோல், மாநகர பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்க இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இன்ஸ்பெக்டர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு துணை கமிஷனர் செந்தில் கூறினார்.

Tags : jewelery ,bungalows ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!