×

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு சூடு பிடிக்கும் மண்பானை விற்பனை

சேலம், மார்ச் 17:சேலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் மண்பானை தயாரிப்பும், விற்பனையும் சூடு படிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்க மேல் தாண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு சேலம் மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வெயிலின் அனல் காற்று வீசியது.

 இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக கரும்பு சாறு, இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, பழச்சாறு போன்றவற்றின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொது மக்கள் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் மண்பானை உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.  மண்பானை விற்பனையும்  சூடு பிடித்துள்ளது.  ஏழைகளின் குளிர்சாதனை பெட்டி என அழைக்கப்படும் மண்பானைகள், பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு கவனம் ஈர்த்து வருகிறது.

இது குறித்து மண்பானை  விற்பனையாளர்கள் கூறுகையில், ‘‘பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மண்பானையை தேடி வருகின்றனர். இதனால் தற்போது மண்பானை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மண்பானையின் அளவு பொறுத்து ₹150 இருந்து ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது. மண்பானையில் குழாய் வைத்தும், பானைகள் வடிவத்திற்கு ஏற்ப ₹250 முதல் ₹400 வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்களிடையே இயற்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால், கோடை காலத்தில் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் மண்பானை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்பது வாழ்நாள் முழுவதும் கேள்வி குறியாகவே உள்ளது,’’ என்றார்.

Tags :
× RELATED திருவள்ளூர் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி