×

பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு தடை

நாமக்கல், மார்ச் 17: கொரோனா வைரஸ் எதிரொலியாக, பொட்டிரெட்டிப்பட்டியில் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க, ஒரு இடத்தில் அதிகமான நபர்கள் கூடுவதை தடுக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் இன்று(17ம் தேதி) நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டியில், பார்வையாளர் கலந்து கொள்ள அனுமதியில்லை என கலெக்டர் மெகராஜ் அறிவித்திருந்தார். காலை 8.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி நேரம் வரை போட்டி நடத்தப்படும். மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே 3 முறை பொட்டிரெட்டிப்பட்டியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

ஆனால், கொரோனா பீதி காரணமாக ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை போட்டியை நடத்த அனுமதியில்லை. மறு உத்தரவு வரும் வரை போட்டியை நடத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்று காலை போட்டியை நடத்துவது குறித்து ஜல்லிக்கட்டு மைதானத்தில், கலெக்டர் மெகராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் பீதியால் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் போட்டியை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நாளை(இன்று) காலை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை லட்சக்கணக்கில் செலவு செய்து போட்டி நடைபெறாத நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் போட்டி தள்ளிப்போய் உள்ளதால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Potterettipatti ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு