×

சாயக்கழிவில் உப்பை குறைக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

குமாரபாளையம், மார்ச் 17: சாயமிடும் பணியின்போது வெளியாகும் கழிவில் உள்ள உப்பின் அளவு அதிகரிப்பதால், நிலத்தடி நீர் வளம் கெடுகிறது. சாதாரணமாக நாம் குடிக்கும் ஆற்று நீரில் 200 டிடிஎஸ் அளவு உப்பு இருக்கும். இதுவே ஆழ்துளை கிணற்று நீரில் 1000 டிடிஎஸ் வரை இருக்கும். சுமார் 2000 டிடிஎஸ் அளவிற்கு உள்ள தண்ணீரை குடிக்க பயன்படுத்தலாம். அதற்கு மேல் உள்ள நீரை அருந்துவதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படும். சாயக்கழிவுகளில் உப்பின் தன்மை சாதாரணமாகவே 10 ஆயிரம் டிடிஎஸ் இருக்கும். இந்த அபாயகரமான நீரை வெளியேற்றுவதால், நிலத்தடி நீரின் தன்மை உப்பாகி விடுகிறது. ஆற்று நீரும் உப்பு நீராகி விடுகிறது. இதனால், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியாகும் சாயக்கழிவுகளை முழுமையாக சுத்திகரித்து, வெளியேற்ற மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், குமாரபாளையத்தில் இயங்கும் தனியார் சாயச்சாலையில், சுற்றுச்சூழலை பாதிக்காத ஆர்கானிக் திரவத்தை பயன்படுத்தி சாயமிடும் பணிகள் நடந்து வருகிறது. இதில், சோடியம் உப்பு பயன்படுத்துவதில்லை. இந்த புதிய முறையில் சாயமிடும் பணியை, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு நேரடி செயல்விளக்கம் காட்டப்பட்டது. குமாரபாளையம் பகுதியிலிருந்து தினசரி 15 கோடி லிட்டரும், பள்ளிபாளையம் பகுதியில் இருந்து தினசரி 13 கோடி லிட்டரும் சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இந்த புதிய முறையில் சாயமிடும்போது நீரின் அளவு மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடுகிறது.

 பழைய முறையில் துணிகளில் சாயம் ஏற்ற சோடியம் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்புதான் கழிவுநீரில் கலந்து, நீர்நிலைகள் மற்றும் மண்ணையும் உப்பாக்கி விடுகிறது. புதிய முறையில் உப்பு எந்த நிலையிலும் பயன்படுத்தப்படவில்லை. இதற்கு மாறாக புதிய ஆர்கானிக் திரவம் கலக்கப்படுகிறது. இதனால், சாதாரணமாக 10 ஆயிரம் டிடிஎஸ் உள்ள கழிவுநீரில் டிடிஎஸ் அளவு வெறும் 3 ஆயிரமாக குறைந்து விடுகிறது. டிடிஎஸ் அளவு குறைந்துவிடுவதால், கழிவுநீரை சுத்தப்படுத்த ஆகும் செலவுகள் குறைந்து விடுகிறது என தெரிவிக்கப்பட்டது. சாதாரணமாக சாயக்கழிவை சுத்தப்படுத்த 8 மணி நேரமாகும். எனவே, 8 மணிநேரம் தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்வையும், சாயப்பட்டறை உரிமையாளர்கள் கண்காணித்தனர்.

Tags : Introduction ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...