×

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை

தர்மபுரி, மார்ச் 17: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக,தர்மபுரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் மலர்விழி பேசியதாவது: கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு,  மூச்சுத்திணறல் ஏற்படும். நோய் தடுப்பு நடவடிக்கைகளாக தினமும் 10 முதல் 15  முறை கைகளை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இருமும் போதும்,  தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை, கை குட்டை கொண்டு மூடிக்கொள்ள  வேண்டும்.  சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால்,  உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

இளநீர், ஓ.ஆர்.எஸ், கஞ்சி  போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை சாப்பிட வேண்டும். இருமல், சளி  உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு  பெறுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட எஸ்பி ராஜன், டிஆர்ஓ ரஹமத்துல்லா கான், அரூர் சப் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெமினி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) சிவக்குமார், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் அனை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்தபின்னர் கலெக்டர் மலர்விழி நிருபர்களிடம் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் முற்றிலும் இல்லை. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், போதிய வசதிகள் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ளும் திருமணங்கள், கோயில் திருவிழாக்கள், சுற்றுலா தலங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குறிப்பாக சந்தைகளில் ஒலிபெருக்கி மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியில்லை. அரசு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டங்கள், சமூக வலைதளங்கள் மூலம் குழுக்கள் அமைத்து ஆலோசனை நடத்தி கொள்ள வேண்டும்.

அங்கன்வாடி மையங்களுக்கு, மார்ச் 31ம் தேதி வரை குழந்தைகள் வர வேண்டாம். தினமும் குழந்தைகளுக்கு தேவையான முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவை, பெற்றோர்கள் வந்து வாங்கி செல்லலாம். கர்நாடக எல்லை பகுதியிலிருந்து ஒகேனக்கல்லில் பரிசலில் வருபவர்களை கண்காணிக்க வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, வனத்துறை இணைந்து குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து அதியமான்கோட்டை கால பைரவர் கோயிலுக்கு வந்தவர்கள், மாநில எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டனர். தமிழக எல்லையில் கன்னட மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags : parties ,
× RELATED கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக கிருமி...