×

காரணைமண்டபம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் விஏஓ அலுவலக கட்டிடம்

உத்திரமேரூர், மார்ச் 17: காரணைமண்டபம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் விஏஓ கட்டிடம் உள்ளது. இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர்.உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் பஸ் நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பட்டா, சிட்டா, அடங்கல், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருமானம், இருப்பிடம் உள்பட பல்வேறு சான்றுகள் பெறவும், நில அளவை சம்பந்தமான பணிகளுக்கும் அரசின் திட்ட பணிகளுக்காகவும் தினமும் வந்து செல்கின்றனர்.

அதே நேரத்தில் கிராமம் சம்பந்தமான அரசின் முக்கிய ஆவணங்களும் இந்த கட்டித்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தினமும் மக்கள் பயன்படுத்தும் இந்த அலுவலக கட்டிடத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கவில்லை. இதனால், கட்டிடம் வலுவிழந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து, அங்குள்ள ஊழியர்கள் மீது விழுகின்றன.

இதனால் தினமும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களும் அச்சத்துடனே வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் சிதலமடைந்த இக்கட்டித்தில் மழைநீர் கசிவு ஏற்படுவதால், அரசின் ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தினை அகற்றி புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags : VAO ,office building ,village ,
× RELATED சாத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!