×

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளிடம் கட்டண கழிப்பறை, குளியலறையில் அடாவடி வசூல்: கண்டு கொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

மாமல்லபுரம், மார்ச் 17: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பறை, குளியலறை வசதிகளை செய்துதர, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுத்துகின்றனர்.உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் பஸ், வேன், கார் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவர்கள், வெண்ணெணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம், புலிக்குகை ஆகியவற்றை பார்வையிட்டு, அவற்றின் முன் நின்று குழுப் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலையில் தலசயன பெருமாள் கோயில் குளம் எதிரே ஆண், பெண் இரு
பாலரும் பயன்படுத்தும் வகையில், மாமல்லபுரம் பேரூராட்சி கட்டுப்பாட்டில், கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளது.இதனை முறையாக பராமரிக்காததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அவ்வழியாக செல்வோர் மூக்கை மூடியபடி செல்கின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து கடற்கரைக்கு சென்று குளித்து விட்டு உடை மாற்றுவதற்காக இந்த குளியலறையை பயன்படுத்துகின்றனர். ஆனால், அங்கு ஒரு நபருக்கு 5 மட்டுமே கட்டணம் என எழுதப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ளவர்கள், ஒரு நபருக்கு 20 கட்டணம் என அடாவடியாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் கடும் சிரமமடைகின்றனர்.

மேலும், பஸ் நிலையம் அருகே ஆண், பெண் என தனித்தனி கழிப்பறை உள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி, சீன அதிபர் வருகைக்கு முன்பு இந்த கழிப்பறைகளை திறந்து சுத்தமாக வைத்தனர். அவர்கள் வந்து சென்ற பிறகு, அதை யாரும் பயன்படுத்த முடியாத அளவில் பூட்டு போட்டு கிடக்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைகின்றனர். மாமல்லபுரம் பேரூராட்சியில் கழிப்பறை மற்றும் குளியலறை வசதி முறையாக செய்யவில்லை என பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நவடிக்கை எடுத்து, பேரூராட்சி முழுவதும் முறையான கழிப்பறை மற்றும் குளியலறை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : bathroom ,bargaining administration ,Mamallapuram ,
× RELATED அவள் கழிவறை