×

பல்லாவரம் ரேடியல் சாலையில் குப்பை கிடங்காக மாறி வரும் மேம்பாலம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

பல்லாவரம், மார்ச் 17: பல்லாவரம் ரேடியல் சாலையை இணைக்கும் மேம்பாலத்தின் கீழ் பகுதியை ஆக்கிரமித்து குவித்து வைக்கப்படும் குப்பைகளால், கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை முறையிட்டும், நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.பல்லாவரம் ரேடியல் சாலையை இணைக்கும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் மூலம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்ததுடன், வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு எளிதில் சென்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலை சந்திப்பு அருகே சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள், பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியை ஆக்கிரமித்து குவித்து வைத்துள்ளனர். இதுபோல் குவிக்கப்படும் குப்பைகள்  மலைபோல் தேங்கி கிடக்கிறது. அதனை, அப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள், நாய்கள், மாடுகள் மேய்ச்சலுக்காக கிளறுவதால், குப்பைகள் சாலையெங்கும் சிதறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகர்கள் நோய்கள் பரவும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக பின்பற்றி வருகிறது. மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டியவை குறித்து, தினமும் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

சமீப காலமாக பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் சுகாதார விஷயத்தில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது. குறிப்பாக பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை ஆக்கிரமித்து குப்பைகளை குவித்து வைப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொடிய நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். ஏற்கனவே இந்த பாலத்தின் கீழ் பகுதியை வணிகர்கள் பலர் ஆக்கிரமித்து, தாங்கள் விற்பனைக்காக வைத்துள்ள பொருள்களை குவித்து வைத்துள்ளனர்.  தற்போது பல்லாவரம் நகராட்சி நிர்வாகமும் தனது பங்கிற்கு குப்பைகளை குவித்து வைத்து, இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

இதனால் பாலத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, கொரோனா, பன்றிக் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா போன்ற கொடிய நோய்கள் எளிதில் மக்களிடம் பரவ வழிவகுக்குமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே பெருகி வரும் நோய்களை கருத்தில் கொண்டு, பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை ஆக்கிரமித்துள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் மருந்து தெளித்து, நோய்கள் பரவுவதில் இருந்து பொதுமக்களை காத்திட, பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : garbage dump ,Pallavaram Radial Road ,
× RELATED 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்