×

செங்கல்பட்டு மாவட்டம் திருமணியில் உயிர்காக்கும் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும்: மாதர், வாலிபர் சங்கங்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மார்ச் 17: தடுப்பூசி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும் என மாதர் சங்கம், வாலிபர் சங்கம் ஆகியவை கலெக்டரிடம் மனு வழங்கியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் துவக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ள உயிர் காக்கும் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை தொடர்ந்து அரசு நடத்த வேண்டும் என இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் வா.பிரமிளா, கலையரசி, மபா.நந்தன், க.புருஷோத்தமன் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.செங்கல்பட்டு மாவட்டம் திருமணியில், தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம்’ தற்போது மூடப்படும் நிலையில் உள்ளது. 110 ஏக்கர் பரப்பளவில் நன்கு  திட்டமிடப்பட்டுள்ள கட்டிடங்களை கொண்டதோடு, பல்வேறு தடுப்பூசி மருந்துகளின்  உற்பத்திக்கு தேவையான நவீன உபகரணங்களும் வாங்கி இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

உலக தரத்தில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பு வளாகமாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் நோய் தடுப்பு மருந்துகள், தனியார் நிறுவனங்கள் மூலம் 1,100 முதல் 3,800 வரை  விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் 75  முதல் 100 வரை மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் தடுப்பூசி  மருந்துகளான தாய்மார்களுக்கு பால் சுரப்பி மருந்து, நாய்க்கடிக்கு மருந்து, மஞ்சள் காமாலை தடுப்பூசி, மூளை அழற்சி தடுப்பூசி, தட்டம்மை, பென்டாவாலன்ட் தடுப்பூசி, ரூபெல்லா தடுப்பூசி, புளூ காய்ச்சலுக்கான மருந்து உள்பட 12 முதல் 15 வகையான மருந்துகளை  தயாரிக்க உள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் ஒன்றாக துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி என்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  

இந்நிறுவனம், தற்போது கடுமையான நிதி நெருக்கடியிலும் உள்ளது. கடந்த 8 மாதங்களாக அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. ஏழைகள் மற்றும் வறுமை கோட்டுக்கு  கீழே  கோடிக்கணக்கான மக்களை கொண்டுள்ள நமது நாட்டில், மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை மிகக் குறைந்த விலையில் அளித்து, மக்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, தேசத்தின் பொது சுகாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக தரத்துடன் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஊழியர்களின் வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்தும் வகையிலும், தமிழகத்தின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கும் தங்களின் மேலான தலையீடு உதவி செய்திடும் வகையில், நிறுவனத்தை தொடர்ந்து செயல்படுத்த, நிதி ஒதுக்கி உற்பத்தியை துவங்கவும்,  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : district ,Chengalpattu ,factory ,Mather and Youth Associations ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்...