×

25% இட ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கீடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு: கேள்வி குறியான ஆசிரியர்களின் எதிர்காலம்

திருவள்ளூர், மார்ச் 17: 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, நிதி ஒதுக்குவதால், அரசுப்பள்ளிகளில் ஆண்டுதோறும் சேர்க்கை குறைவதாக, ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள், தனியார் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை, கல்வியை தொடரலாம். இதற்கான கல்வி கட்டணத்தை, அரசே செலுத்துகிறது.
கோடிக்கணக்கான ரூபாய், இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள், இத்திட்டத்தால் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இதனால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. ஆனால் இந்த சரிவை சரிகட்ட, பள்ளிக்கல்வித்துறையிடம் உருப்படியாக எந்த திட்டமும் இல்லை. பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையிலும், அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிக்கான, அறிவிப்பு இல்லை.

பல அரசுப்பள்ளிகளில், அதிக சேர்க்கை இருந்தும், வகுப்பறை பற்றாக்குறையால், கூடுதல் பிரிவு துவங்க முடியாத நிலை நீடிக்கிறது. மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், கழிவறை, குடிநீர் சுத்திகரிப்பான், மின்விசிறி, நாற்காலி, என அத்தியாவசிய தேவைகள் கூட, பூர்த்தியடையாத நிலை உள்ளது.இதனால், ஆட்டோ, வேன் வசதி ஏற்படுத்தி தந்தாலும், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். தொடர்ந்து சேர்க்கை சரிந்து வருவதால், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்து, ‘டெட்’ தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் எதிர்காலம், கேள்விக்குரியதாக மாறியுள்ளதாக, பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘25 சதவீத இடஒதுக்கீட்டுக்காக, 2012-13 கல்வியாண்டில் இருந்து தற்போது வரை, அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை, அரசுப்பள்ளிகளுக்கு செலவிட்டிருந்தால், மாணவர் சேர்க்கை பலமடங்கு அதிகரித்திருக்கும். மத்திய அரசின் சட்டத்தில், அந்தந்த மாநில அரசுகளின் கொள்கை முடிவுக்கேற்ப சில மாற்றங்கள் கொண்டு வரலாம். இதற்கு தமிழக அரசு முன்வந்தால், அரசுப்பள்ளிகளின் தரம் மேம்படும். ஆசிரியர்களுக்கும் வேலை கிடைக்கும்’ என்றார்.

Tags : government schools ,teachers ,
× RELATED அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு...