×

திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு

திருவாரூர், மார்ச் 17: திருவாரூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து கட்டிய தொகையினை திரும்ப பெற்று தர கோரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவாரூர் காணியாளர் தெருவில் வசித்து வந்தவர் நீதிமோகன் (65). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் திருவாரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலான விவசாய நிலங்களை வாங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான வீட்டு மனைகளை அமைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் அரசு அனுமதி பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் அளித்த உத்தரவை அடுத்து மாநிலம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் என்பது அதல பாதாளத்திற்கு சென்றது. இதேபோல நீதிமோகன் மூலம் அமைக்கப்பட்ட பிளாட்டுகளும் விற்பனையாகாமல் போனதால் அவரிடம் பங்குதாரர்களாக இருந்த அனைவரும் தங்களது பங்கு தொகையை பெற்றுக்கொண்டு பிரிந்து சென்றனர். மேலும் வீட்டு மனைகளுக்கு முன்பணம் அளித்தவர்களுக்கு வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் முன்பணம் அளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது பணத்தினை திரும்ப பெற்றனர். இதன் காரணமாக நீதி மோகன் பெரும் பண நெருக்கடிக்கு ஆளானார்.

மேலும் முன்பணம் மட்டுமின்றி பலர் முழு தொகையும் செலுத்திய நிலையில் அவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் மூலம் நீதி மோகன் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து நீதிமோகன் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரிடம் முகவராக இருந்து வீட்டு மனைகளை விற்பனை செய்து கொடுத்தவர்களில் ஒருவரான திருவிடைவாசல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (40) என்பவர் நீதிமோகனிடமிருந்து தொகையினை பெற்று தர கோரி கடந்த 9ம் தேதி திருவாரூர் வடக்கு வீதியில் இருந்துவரும் பிஎஸ்என்எல் நிறுவன செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து அவரிடம் சமாதானப் பேச்சு நடத்திய நிலையில் மாலை 5 மணி அளவில் ரமேஷ் கீழே இறக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ரமேஷ் மற்றும் நீதிமோகனிடம் வீட்டு மனைகளுக்காக பணம் கட்டி ஏமாந்துள்ளவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் கட்டிய தொகையினை திரும்ப பெற்று தரக் கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags : Thiruvarur ,Real Estate Agent ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்