×

குமரியில் கொட்டுது காசு... கஞ்சா சப்ளையர்களாக மாறிய இளம்பெண்கள்

நாகர்கோவில், மார்ச் 17 : அதிகளவில் பணம் கிடைப்பதால் மதுரை, தேனியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு இளம்பெண்கள், பெண்கள் கஞ்சா கடத்தி கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது. மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சப்ளையாகும் கஞ்சா பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் நாகர்கோவில் வடசேரி பகுதியில்  பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரையில் இருந்து ஒரு பெண் நாகர்கோவிலுக்கு கஞ்சாவை கொண்டு வந்து சப்ளை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணை பிடிக்க எஸ்.பி. நாத் உத்தரவின் பேரில், ஏ.எஸ்.பி. ஜவகர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சுமார் 10.5 கிலோ கஞ்சாவுடன், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே நின்று கொண்டு இருந்த தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மனைவி செல்வி (38) என்பவரை வடசேரி போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள கஞ்சா விற்பனை கும்பலுக்கு, இவர் மதுரையில் இருந்து பஸ்சில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. மதுரை, தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்து தான் அதிகளவில் கஞ்சா, குமரி மாவட்டத்துக்கு சப்ளை ஆகிறது. ஒரு கிலோ கஞ்சா ₹5 ஆயிரம், 7 ஆயிரம், ₹10 ஆயிரம் என விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது அதிகளவில் வியாபாரிகள் முளைத்து விட்டதால் அவர்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டு கஞ்சா விலையையும் கணிசமாக குறைத்துள்ளனர். அந்த வகையில் செல்வி, 1 கிலோ ₹5 ஆயிரம் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள கஞ்சா விற்பனையாளர்களுக்கு இவர் கஞ்சா கொண்டு வந்துள்ளார்.

ஆண்களிடம் கஞ்சா இருந்தால் போலீசில் எளிதில் பிடித்து விடுவார்கள் என்பதால் பெண்களை வைத்து கஞ்சா சப்ளை நடக்கிறது. பண ஆசை காட்டி பயணிகள் போல் பஸ், ரயில்களில் கஞ்சாவுடன் இளம்பெண்களை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருவதற்கு முன்பே தயார் நிலையில் உள்ள வியாபாரிகள், இளம்பெண்கள் வந்து சேர்ந்ததும் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் கொண்டு வரும் கஞ்சா பேக்கை அப்படியே ெகாண்டு செல்வார்கள். ஒரு சில சமயங்களில் மட்டுமே நேரடியாக பணம் கொடுக்கப்படும். இல்லையென்றால் முன்னதாகவே வங்கியில் பணம் டெபாசிட் செய்த பின், தான் சரக்கு வந்து சேரும். பணத்துக்கு ஆசைப்பட்டு இளம்பெண்கள் சிலரும் இது போன்று கஞ்சா சப்ளையர்களாக மாறி உள்ள தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது. தற்போது கைதாகி உள்ள செல்வி மீது தேனி மாவட்ட காவல் நிலையத்திலும் கஞ்சா வழக்கு உள்ளது. தற்போது இவருக்கு யார் மூலம் கஞ்சா கிடைத்தது என்பது பற்றி விசாரிக்கும் வகையில், தனிப்படை போலீசார் மதுரை செல்ல உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி. எச்சரிக்கை எஸ்.பி. நாத் கூறியிருப்பதாவது :
குமரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து தான் கஞ்சா கொள்முதல் செய்து விற்பனைக்காக ெகாண்டு வருகிறார்கள். குறிப்பாக தேனி மாவட்டத்தில் தான் இருந்து அதிகளவில் கஞ்சா வருவதாக தகவல் கிடைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள சிறு, சிறு வியாபாரிகள் மூலம் மொத்த வியாபாரிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கடந்த மாதம் தனிப்படை போலீசார் பணகுடியை சேர்ந்த ராமையா, சமூக ரெங்கபுரத்ைத சேர்ந்த கமலநாதன், வடசேரியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தேனி மாவட்டம் கம்பத்தை  சேர்ந்த செல்வி பற்றிய விவரங்கள் கிடைத்து, தற்போது அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை புவனேஷ் மணி, காமராஜ், அந்தோணி, கஞ்சா கிருஷ்ணன், ஜெயா உள்ளிட்ட சிலர் தொடர் கஞ்சா வியாபாரிகளாக இருந்தனர். போலீஸ் கடும் நடவடிக்கைக்கு பின், இவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.  கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா பயன்படுத்துகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் இது பற்றிய புகார்களை காவல்துறைக்கு தெரிவிக்கலாம்  என்றார்.

Tags : women ,cannabis suppliers ,
× RELATED திருச்சி அருகே அறுந்து கிடந்த...