×

குமரி- கேரள எல்லையில் மார்ச் 31 வரை சினிமா தியேட்டர்களை மூட வேண்டும்

நாகர்கோவில், மார்ச் 17: குமரி மாவட்ட கேரள எல்லை பகுதியில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை சினிமா தியேட்டர்களை மூடி வைத்திருக்க கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் கடந்த 15ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா வைரஸ் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லை என்றபோதிலும் இந்த நோய் அண்டை மாநிலங்களில் இருந்து பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்கள்.அவற்றுள் இந்த வைரஸ் மக்களிடையே பரவுவதை தடுக்கும் பொருட்டு மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள எல்லையோர தாலுகாக்களில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் அதிக அளவில் அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லையோர தாலுகாவான விளவங்கோடு தாலுகாவில் உள்ள மூன்று சினிமா தியேட்டர்களை மார்ச் 31ம் தேதி வரை மூட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cinema theaters ,Kumari ,Kerala ,border ,
× RELATED அரசியல் கட்சிகள் பணம் கொண்டு வருவதை...