பெரணமல்லூர் அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை அதிகாரிகள் மெத்தனம் என குற்றச்சாட்டு

பெரணமல்லூர், மார்ச் 17: பெரணமல்லூர் அருகே ஏரி பகுதியில் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பெரணமல்லூர் அடுத்த மாளிகைப்பட்டு மதுரா மேல்கொவளைவேடு பகுதியில் சுமார் 300க்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இங்குள்ள ஏரியை நம்பி சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக விவசாயிகள் ஏரி பாசனத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த பகுதியை ஒட்டியுள்ள செங்கம்பூண்டி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பலர் ஏரியில் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதால் ஏரிப்பாசனம் நம்பி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தவிர இந்த ஆக்கிரமிப்பால் செங்கம்பூண்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் ஏரியை ஒட்டி உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு செல்ல வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, செங்கம்பூண்டி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கூறியதாவது: ‘எங்கள் கிராம பகுதியையொட்டி மேல்குவளைவேடு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் செங்கம்பூண்டி பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் சுமார் 40 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வேர்கடலை, நெல் உள்ளிட்ட பயிர்களை பயரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்’. மேலும், வெளியிலிருந்து ஏரி பகுதியில் பைப் லைன் புதைத்து சென்று தண்ணீர் பாய்ச்சி விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளனர். முக்கியமாக இந்த ஆக்கிரமிப்பு பகுதியையொட்டி பட்டா வைத்துள்ள எங்களின் நிலம் உள்ளதால் நாள்தோறும் நாங்கள் எங்கள் நிலத்திற்கு செல்ல ஆக்கிரமிப்பு பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்லும்போது ஆக்கிரமிப்பு விவசாயிகள் ஏன் எங்கள் பகுதி வழியே செல்கிறீர்கள்? என எங்களை விரட்டுகின்றனர். விவசாய நிலம்பட்டா வைத்துள்ள எங்களுக்கே இந்த நிலைமை என்றால் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க வரும் நாடோடிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.

இந்த ஏரியில் ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு நாங்கள் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், அவர்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதால் எங்கள் பகுதியில் விவசாயம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், இது போன்ற ஆக்கிரமிப்பாளர்களால் ஒட்டுமொத்த கிராமமே எதிர்காலத்தில் குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டு விவசாயம் அழியும் சூழலில் உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நலனை காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>