×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குளத்தை அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் தூர்வாரினர்

திருவண்ணாமலை, மார்ச் 17: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குளத்தினை தூர்வாரும் பணியில் அரசு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் 72 பேர் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கிரிவலப்பாதை அபயமண்டபம் அருகே உள்ள பாழடைந்த குளத்தினை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் பாண்டியன் பணியை துவக்கி வைத்து பேசுகையில், ‘நீர் நிலை பகுதியினை பாதுகாத்து மழை காலங்களில் தண்ணீர் சேகரிப்பதன் மூலம் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் வேளாண் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து சேதமடைந்துள்ள மற்றும் சீரமைக்கப்படாமல் உள்ள் நீர் நிலைகளை தூர்வாரி அதனை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கிரிவலப்பாதையில் உள்ள குளத்தினை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுளார்கள். கிரிவலம் வரும் பக்தர்கள் இந்த குளத்தினை மீண்டும் சேதப்படுத்தாமல், குப்பை கழிவுகளை கொட்டாமல் அவர்களும் முன் வந்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்’ என்றார். இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய தூர்வாரும் பணியில் மாணவர்கள் மாலை வரை ஈடுபட்டு வந்தனர். அப்போது, குளத்தில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி குளத்தை தூய்மை படுத்தினர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அபயமண்டபம் அருகே உள்ள குளத்தினை வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : pond ,Government Agricultural College ,Thiruvannamalai Kirivalappathi ,
× RELATED சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு...