×

கொரோனா எதிரொலியாக தமிழக சிறைகளில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு அதிகாரிகள் தகவல்

வேலூர், மார்ச் 17: கொரோனா எதிரொலியாக தமிழக சிறைச்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக பல நாடுகளில் பொதுமக்கள் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்தியாவிலும் 112 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பராமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 16 நாள் விடுமுறை அளித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 4 பெண்கள் தனிச்சிறை, மாவட்ட சிறைகள் மற்றும் கிளைச்சிறைகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக சிறைச்சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பதுடன், கைதிகளுக்கு கைகளை கழுவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் எதிரொலியாக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பாதுகாப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சிறைச்சாலைகள் முழுவதும் தினமும் கிருமி நாசினி தெளிக்கவும், பிளீச்சிங் பவுடர் தூவவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிறைக்கு வரும் புதிய கைதிகள் முழுமையான சோதனைக்கு பிறகே கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கிற்கு மாற்றப்படுகின்றனர். இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்கின்றனர். மேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Tags : jails ,Tamil Nadu ,
× RELATED நீர்நிலைகளை சீரமைத்து மழைநீரை...