×

புழல் பகுதியில் உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்: வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம்

புழல்: புழல் ஏரி உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.புழல் ஏரியின் ஒரு பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பலர் விவசாயம் செய்து வந்தனர். இங்கு விவசாயத்துக்கு, புழல் ஏரியிலிருந்து கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, கன்னடபாளையம், புறாகுளம் வழியே 8 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட உபரிநீர் கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து செய்யப்பட்டு இருந்தது.நாளடைவில் இந்த விவசாய நிலங்கள் மறைந்து, தற்போது அங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வீட்டுமனைகளாக பிரித்து, பல்வேறு வீடுகள், கடைகளுடன் கூடிய நகர் பகுதிகளாக உருமாறிவிட்டன. இதனால் அப்பகுதிகளில் உபரிநீர் கால்வாய் இருந்த சுவடுகள் மறைந்துவிட்டன. இதனால் மழைக் காலங்களில், இப்பகுதி வழியே தண்ணீர் வெளியேற வழியின்றி, ஆங்காங்கே கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர்  புகுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன.

இதேபோல் கடந்த 2015ம் ஆண்டில் பெய்த மழையின்போது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்நேரங்களில் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை அகற்றி, இவ்வழியே மழைநீர் வெளியேற சீரான பாதை அமைப்பதற்கு  மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : catchment area ,flooding ,homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை