×

திரிசூலம் ரயில் நிலையம் அருகே கிருஷ்ணன் சிலையை கடத்திய 2 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை

ஆலந்தூர்: கிருஷ்ணன் சிலையை கடத்திய 2 பேரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கைது செய்தனர். அவர்களிடம் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை திரிசூலம் ரயில்நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் சாமி சிலையை விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி கூடுதல் கண்காணிப்பாளர் ஜோஷ்தங்கையா மற்றும் டிஎஸ்பி சுந்தரம் தலைமையிலான சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திரிசூலம் ரயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திரிசூலத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலையை நோக்கி சந்ேதகத்திற்கு இடமான வகையில் கையுடன் பைக் ஒன்று வேகமாக வந்தது. இதை கவனித்த தனிப்படையினர் பைக்கை வழிமறித்து இருவரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்கள் வைத்திருந்த பைக்கை சோதனை செய்தபோது, அதில் ஒரு அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆன கை உடைந்த நிலையில் கிருஷ்ணன் சிலை இருந்தது.

உடனே இருவரையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் கிண்டியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது திரிசூலம் எம்ஜிஆர் நகர் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த கோட்டைசாமி (47) என்றும், மற்றொருவர் ஜமின் பல்லாவரம் கச்சேரி மலை, தர்கா சாலையை சேர்ந்த சுரேஷ் (43) என தெரியவந்தது. சுரேஷ் இந்த சிலையை கோட்டைசாமியுடன் சேர்ந்து சிலை திருட்டு கும்பலிடம் நல்ல விலைக்கு விற்க கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து இருவரையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இந்த சிலையை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது? சிலையில் அறுக்கப்பட்ட கை எங்கே உள்ளது? சிலையை யாரிடம் விற்பனை செய்ய கொண்டு வந்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஒரு அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆன கிருஷ்ணன் சிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : statue ,Krishnan ,Trissul Railway Station ,
× RELATED ?வாஸ்து எந்திரம் என்றால் என்ன? அதை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?