×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பல்லவர் கால சிற்பங்கள் சேதம்

* அதிருப்தியில் பக்தர்கள்
* பராமரிக்க கோரிக்கை

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலை முறையாக பராமரிக்காமல் விட்டதால் பல்லவர் கால கோபுரத்தில் மரக்கன்றுகள் முளைத்து சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இடிந்து விழும் முன்பு கோயிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோயில்களுள் ஒன்றான ஏகாம்பரநாதர் கோயில் பல்லவர் காலத்திலேயே சிறப்புப்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இக்கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்கு பிற்பட்டது என கருதப்பட்டாலும், இக்கோயில் 1300 ஆண்டுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது என கருதப்படுகிறது.இத்தகைய சிறப்பு பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் வளாகம் முறையான பராமரிப்பு இல்லாததால் நாளுக்குநாள் சிதிலமடைந்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோயில் வளாகத்தில் உள்ள பல்லவர் கோபுரம் மற்றும் தம்பட்டை விநாயகர் சன்னதியில் மேல்புறம் அரச மரம் வளர்ந்து உள்ளது.  இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலமுறை தெரிவித்தும், இதனை அகற்றாததால் அரச மரம் பெரிதாக வளர்ந்துள்ளது.

இதனால் சன்னதி சுவரில் விரிசல் ஏற்பட்டு சன்னதி இடியும் நிலையில் உள்ளது.  எனவே பழமை வாய்ந்த கோயிலை பாதுகாக்கும் வகையில் இனிமேலாவது உடனடியாக இந்த மரக்கன்றுளை அகற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘பல்லவர் கால கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் இந்த கோயில் உள்ளது. ஆனால் சிறப்பு வாய்ந்த இந்த கோயிலை முறையாக பராமரிக்காமல் விட்டதால் தற்போது அரச மரம் போன்ற மரங்களும், செடிகளும் முளைத்து கோபுரம் மற்றும் கோயில் சுற்றுச்சுவர்கள் விரிசல் ஏற்பட்டு வருகின்றன. எனவே மரக்கன்றுகளை அகற்றி கோயிலை சீரமைக்கவும், முறையாக பராமரிக்கவும் வேண்டும் என பக்தர்கள் பலமுறை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்லவர் கால வரலாற்று சுவடாக திகழ்ந்து வரும் கோயில் கோபுரத்தை இனியாவது பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றனர்.

Tags : Kanchipuram Ekambaranathar Temple ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.25 லட்சம் வசூல்