×

புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை காலி செய்ய நோட்டீஸ் தொல்லியல் துறையை கண்டித்து மறியல்: சிறுதாவூரில் பரபரப்பு

சென்னை: திருப்போரூர் அருகே சிறுதாவூர் கிராமத்தில் மேயக்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அளித்த தொல்லியல் துறை அதிகாரிகளை கண்டித்து திருப்போரூர்-திருக்கழுகுன்றம் சாலையில் திடீரென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். திருப்போரூர் அருகே சிறுதாவூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக சுமார் 100 பேர் பிரதான கிராமத்தின் மேற்கு பகுதியில் காலியாக இருந்த மேயக்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியேறினர். தற்போது அப்பகுதியில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதிகள் செய்து தரப்பட்டன. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும், அங்கு ஏராளமான முதுமக்கள் தாழி உள்ளதாகவும் கூறி, அங்கு வசிக்கும் மக்கள் காலி செய்ய நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் புதிய சாலைகள் போடப்படாததால் அவை குண்டும், குழியுமாக மாறின. இதையடுத்து நேற்று காலை பொதுமக்கள் மத்திய தொல்லியல் துறை நோட்டீசை ரத்து செய்ய கோரியும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும்  திருப்போரூர்-திருக்கழுகுன்றம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் உரிய அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் வார நாட்களில் மக்களின் கோரிக்கை குறித்து பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Archaeological Department ,
× RELATED ஆண்டிபட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை அமைக்க கோரிக்கை