×

திருவொற்றியூர் மண்டலத்தில் அவலம் சாலையில் கொட்டப்படும் தனியார் நிறுவன கழிவுகள்: வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரித்து திருவொற்றியூர் கார்கில் நகர் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். இந்த குப்பை கிடங்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட துவங்கியுள்ளதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. தற்போது குப்பையை தரம் பிரிக்கும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மக்கும் குப்ைப உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை கொருக்குப்பேட்டையில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கும் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.இந்நிலையில், ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்களது பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளை முறையாக அகற்றாமல், லாரிகள் மூலம் கொண்டு வந்து கார்கில் நகர் மற்றும் பேசின் சாலையோரங்களில் கொட்டி விடுகின்றனர்.அதுமட்டுமின்றி இவ்வாறு கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைத்து விடுகின்றனர்.

இதனால் இந்த வழியாக பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்னை ஏற்படுகிறது.இவ்வாறு சாலையோரம் குப்பை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், அதிகாலை 2 லாரிகளில் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை திருவொற்றியூர் மேம்பாலம் அருகே பேசின் சாலையோரம் சிலர் கொட்டினர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், இதை தடுத்து நிறுத்தி, திருவள்ளூரை சேர்ந்த அகிலேஷ், சுரேஷ் என்ற 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.பின்னர் இது சம்பந்தமாக திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு வந்த உடன் லாரிகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட லாரி ஓட்டுனரிடம் விசாரித்தபோது, அந்த பிளாஸ்டிக் கழிவுள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், கும்மிடிப்பூண்டி பகுதியில் கொட்டினால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இடைத்தரகர்கள் மூலம் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை திருவொற்றியூரில் கொண்டு வந்து கொட்டியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு ₹5 லட்சம் வரை அபராதம் விதிக்கமுடிவு செய்தனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் முறையாக அகற்றாமல் சாலையோரங்களில் கொட்டி தீவைக்கின்றனர். இவர்களை பார்த்து தற்போது, தனியார் சிலர் கழிவுகளை சாலையோரங்கள் கொட்டி விடுகின்றனர். மேலும் குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்கள், பாதாள சாக்கடையில் இருந்து தூர்வாரும் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறுவது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் அதை கண்டுகொள்வது இல்லை. தற்போது குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களை பிடித்து மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பது போல், குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : road ,Tiruvottiyur ,Fun ,zone ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...