×

புதியவர்களுக்கு 360 கடைகள் ஒதுக்கீடு மெரினாவில் வியாபாரம் செய்ய 30க்கும் மேற்பட்ட நிபந்தனை: மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

சென்னை: மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்ய 30க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்தும், இவற்றை மீறினால் ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் லூப் சாலையை சீரமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை சீரமைத்து 900 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு 60 சதவீத கடையும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 40 சதவீத கடையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மெரினா கடற்கரையில் 1,300 வியாபாரிகள் அடையாள அட்டை பெற்று இருக்கும் நிலையில் அவற்றில் 540 பேருக்கு மட்டும் கடைகள் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மெரினா கடற்கரையில் கடை வைக்க விரும்புவர்கள் வரும் 3ம் தேதி முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதன்படி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு குலுக்கல் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்ய தேர்வு செய்யப்படும் விற்பனையாளர்கள் 30க்கும் மேற்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது. இதன்படி ஒரு குடும்பத்துக்கு ஒரு கடை மட்டுமே வழங்கப்படும். குளிர்பானங்கள், அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், சிற்றுண்டி உணவுகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். உணவு விற்பனையாளர்கள் இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சான்றிதழை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி அளித்துள்ள ஸ்மார்ட் வண்டியை தவிர்த்து வேறு எந்த கட்டமைப்பையும் உருவாக்க கூடாது. எல்பிஜி சிலிண்டர் மற்றும் ஜெனரேட்டர் வைக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது. கடைகளை சுற்றி மேஜை மற்றும் நாற்காலிகள் போட அனுமதி இல்லை உள்ளிட்ட 30 நிபந்தனைகள் சென்னை மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துதல் உள்ளிட்டவைகளை மேற்கொண்டால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags : shops ,newcomers ,
× RELATED 9 மாதத்தில் 20 ஆயிரம் கடைகளுக்கு சீல்...