×

கொஞ்சம் நடவடிக்கை எடுங்க ஆபீசர்ஸ் குரங்கு தொல்லை தாங்கமுடியல...

பூதப்பாண்டி, மார்ச் 13: குமரியில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக 25 கிராமங்களில் குரங்கு தொல்லை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தின் மலையோர கிராமங்களில் வன விலங்குகளின் தொல்லை சமீப காலமாக அளவுக்கு அதிகமாகவே உள்ளது. தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் மலை பகுதிகளில் தண்ணீர் வற்றிவிட்டன. மரங்களும் காய தொடங்கி விட்டன. இதனால் வனத்தில் உள்ள விலங்குகளின் அன்றாட தேவைக்கான குடி தண்ணீர், உணவு பொருட்கள் கிடைக்கவில்லை.இதனால் குரங்கு உள்பட வன விலங்குகள் மலையோர கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கவிட்டன. பூதப்பாண்டி, சீதப்பால், சிறமடம், கடுக்கரை, காட்டுப்புதூர், திடல், தடிக்காரன்கோணம், செண்பகராமன் புதூர் உள்பட சுமார் 25 கிராமங்களில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள வீடுகளை சுற்றிலும் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் உள்ளன.இங்கு வரும் குரங்குகள் மாங்காய்களை பறித்து பாதியை தின்றுவிட்டு மீதியை தூக்கி வீசுகின்றன. இதேபோல் பலா, கொய்யா உள்ளிட்ட பழங்களையும் நாசம் செய்து விடுகின்றன. இது தவிர தென்னை மரங்களில் ஏறி தேங்காய் மற்றும் இளநீரை பறித்து கையால் துளையிட்டு தண்ணீரை குடித்துவிட்டு கீழே தூக்கி வீசுகின்றன. கதவு திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.

வீட்டில் சமைத்து வைத்திருக்கும் உணவு பொருளை பாத்திரத்தோடு தூக்கி சென்று ஏதாவது இடத்தில் வைத்து சாப்பிட்டு விட்டு பாத்திரத்தை தூக்கிவீசிவிட்டு செல்கின்றன. இதனால் வீட்டில் உணவுபொருள் சமைத்து வைக்க முடிவது இல்லை. வீட்டின் கதவு அருகே அமர்ந்து இருக்கும் குரங்குகள் கதவை திறந்ததும் சட்டென்று உள்ளே புகுந்து நேராக சமையலறை சென்று உணவு பொருட்களை தூக்கி செல்கின்றன. இதேபோல் கடைகளில் இருந்து பொருட்கள் வாங்கி வரும் பொது மக்களிடம் இருந்தும் பொருட்களை லாவகமாக பறித்து செல்கின்றன. வீட்டிற்கு வெளியே குழந்தைகள், பெரியவர்கள் யாரானாலும் அமர்ந்து தின்பண்டங்கள் சாப்பிட முடியாத நிலை உள்ளது. குரங்குகளை துரத்தினால் பயங்கர சத்தத்துடன் அவர்களை மிரட்டியபடி கடிக்க பாய்கிறது. இதனால் பொது மக்கள் பயந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். குரங்குகள் தானாகவே அங்கிருந்து கலைந்து செல்லும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்து உள்ளனர். இருப்பினும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குரங்குகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு இருப்பதால் பொது மக்கள் அவற்றின் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாத நிலை உள்ளது.

குரங்கு கூட்டத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட அரசு திட்டங்களும் இல்லை. தற்போது குரங்கு கூட்டத்தில் பூதப்பாண்டி, தடிக்காரன் கோணம், சிறமடம், செண்பகராமன்புதூர் பகுதியை சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பூதப்பாண்டி வனசரகத்துக்கான அலுவலகம் ஆரல்வாய்மொழியிலும், அழகியபாண்டிபுரம் வனசரகத்துக்கான அலுவலகம் எட்டாமடையிலும் உள்ளன. குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த சுமார் 25 கிராம மக்களும் இந்த 2 அலுவலங்களுக்கும் மாதம் 20 முறை புகார் கொடுத்து உள்ளார்களாம். இருப்பினும் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் இது விஷயத்தில் அலட்சியமாக இருந்து வருவதாக கிராம மக்கள் புகார் கூறி உள்ளனர். ஆகவே இனி வரும் காலங்களில் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: மாவட்ட வன அலுவலர் பேட்டி