×

குளச்சலில் பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு இளைஞர் காங்கிரசார் மீது போலீஸ் தடியடி 21 பேர் கைது

குளச்சல், மார்ச் 13 : குளச்சலில் பாதயாத்திரைக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து மறியல் செய்த இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர்.சுதந்திர போராட்டத்தின் போது நடந்த தண்டியாத்திரை தினத்தையொட்டி, குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று (12ம்தேதி), குளச்சல் காமராஜர் சிலையில் இருந்து  இரணியல் சந்திப்பு வரை பாதயாத்திரை நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். இந்த யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது. இந்த நிலையில் காலை 11 மணியளவில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் முனா, நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நவீன்குமார், குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் காரல்மார்க்ஸ்,  தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவர் அருள் ஆன்றனி, மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் பேராசிரியர் சுந்தர்ராஜ், கல்லுக்கூட்டம் பேரூர் தலைவர் மனோகர சிங், மாவட்ட மருத்துவ பிரிவு டாக்டர் பினுலால்சிங் மற்றும்  இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் காமராஜர் சிலை முன் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் பாதயாத்திரைக்கு அனுமதி இல்லை. அதை மீறி பாதயாத்திரை சென்றால் அனைவரையும் கைது செய்வோம் என்றனர். இது தொடர்பாக போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தண்டியாத்திரை உறுதிமொழி எடுத்துவிட்டு கலைந்து சென்று விடுவோம்.  இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் வந்து ெகாண்டு இருக்கிறார். அவர் வந்தவுடன் நிகழ்ச்சி தொடங்கி விடுவோம் என்றார். இதற்கு போலீஸ் தரப்பிலும் சம்மதம் தெரிவித்தனர். அந்த சமயத்தில் இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் வந்த சுமார் 20 பேர், திடீரென போலீசாரை கண்டித்து குளச்சல் காவல் நிலையம் ரோட்டில் மறியலில் அமர்ந்தனர்.  உடனடியாக போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மறியலில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது போலீஸ் வேனில் ஏறிய லாரன்ஸ் உள்ளிட்ட இளைஞர் காங்கிரசார் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு வேனில் இருந்து இறங்க முயன்றனர். அவர்களை ஆயுதப்படை போலீசார் தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதனால் ஆத்திரம் அடைந்த ஆயுதப்படை போலீசார் திடீரென வேனுக்குள் வைத்தே இளைஞர் காங்கிரசார் மீது தடியடி நடத்தினர். பின்னர் போராட்டக்காரர்களை போலீஸ் வேனில் குளச்சல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸ் வேனில் இருந்து இறங்கி காவல் நிலையத்துக்குள் செல்லும் போதும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது ஆயுதப்படை போலீசார் தடியடி நடத்தினர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் வின்சென்ட், வேணு, விஜூமோள், கிளிட்டஸ், ஜூயூட்லின் ஜீவா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனுமதியின்றி மறியல் செய்து போலீசாரை தாக்கி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீசார் கூறினர். இது தவிர மேலும் 15 பேர் அனுமதியின்றி மறியல் செய்ததாக கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.சட்டசபையில் புகார் இது குறித்து வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வேண்டுமென்றே காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் வீடியோ எங்களிடம் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் மூலம் சட்டசபையில் இந்த பிரச்னையை எழுப்புவோம் என்றார். நிர்வாகிகள் மகேஷ் லாசர் உள்ளிட்டோர் உடன் வந்து இருந்தனர்.

4 போலீசார் பேர் படுகாயம் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், காமராஜர் சிலை முன் உறுதிமொழி எடுத்து விட்டு கலைந்து சென்று விடுவோம் என கூறிய நிலையில் திடீரென மறியல் செய்தனர். அவர்களை கைது செய்த போது போலீஸ் வேனில் ஏற மறுத்து ஆயுதப்படை போலீசாரை தாக்கினர். இதில்  ஆயுதப்படை போலீசார் காளிதாஸ், கணேஷ் ராஜன், சண்முகம், பிச்சுமணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றனர்.

Tags : persons ,youth congressman ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...