×

10 ஆண்டுகளாக பூட்டி கிடந்த எரிவாயு தகன மேடை ₹13 லட்சத்தில் புதுப்பிப்பு

கடலூர், மார்ச் 13: கடலூரில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாற்றங்கரைகளில் சடலங்கள் புதைக்கவும் எரிக்கவும் செய்யப்படுவதால் காற்று மாசடைந்து சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. அருகாமை குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றமும் வீசியது. எனவே கடலூர் மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை ஆகிய இரு இடங்களில் தலா ரூ.50 லட்சம் செலவில், எரிவாயு தகன மேடைகள் அமைக்கும் பணி  கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்டது.
கருவேல முள் கட்டைகளை பயன்படுத்தி எரித்து அதனால் உண்டாகும் ‘பயோ கேஸ்’ ஒரு குழாய் மூலம் எடுத்துச்சென்று 6 பர்னல்களின் உதவியால் பிரேதத்தை துர்நாற்றம் இல்லாமல் எரிக்கும் வகையில் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டன. இந்த தகன மேடைகளை தனியார் அறக்கட்டளை மூலமாகத்தான் நிர்வகிக்க வேண்டும் என நகராட்சிகளின் இயக்குநர் உத்தரவின்பேரில் அதற்கான நடவடிக்கைகளை கடலூர் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் இரு இடங்களிலும் கட்டி முடிக்கப்பட்ட தகன மேடைகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக அங்குள்ள எரிவாயு தகன மேடைகள் உரிய பராமரிப்பின்றி பழுதடைந்தன.  பொது மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கம்மியம்பேட்டை எரிவாயு தகன மேடை மீண்டும் சீரமைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரேதங்கள் எரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அடிக்கடி இந்த தகனமேடை பழுதாகி சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், மஞ்சக்குப்பம் பெண்ணையாற்று சுடுகாட்டு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வராமலேயே பாழாகியது. இந்த தகன மேடைக்குள் இருந்த எரிவாயு கலன்கள், புகை போக்கிகள், பிரேத மேடை போன்றவை உலுத்து போயுள்ளன. பல லட்சம் மதிப்பில் செலவிடப்பட்டு கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை சாதனங்கள் அனைத்தும் பழுதடைந்தது.கடலூர் நகரில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக துவங்கப்பட்ட எரிவாயு தகன மேடை நடைமுறைக்கு வராமல் பாழாகி வருவதாக குறிப்பிட்டு இதனை சரி செய்து உடனடியாக மஞ்சக்குப்பம் எரிவாயு தகன மேடையை திறக்க வலியுறுத்தி இயக்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர், பொது நல இயக்கங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனுக்கள் அளித்தன.  இதையடுத்து பெரு நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி தலைமையில் நகர நல அலுவலர் டாக்டர் அரவிந்த்ஜோதி, பொறியாளர் ஜெயபிரகாஷ்நாராயணன் மற்றும் அலுவலர்கள், இது குறித்து ஆலோசித்து மரங்களை எரித்து அதன் மூலம் கிடைக்கும் வாயுவில் பிரேதங்களை எரியூட்டும் முறைக்கு பதிலாக சமையல் எரிவாயுவை பயன்படுத்தி பிரேதங்களை எரிக்கும் தொழில்நுட்ப முறையை பயன்படுத்துவதென்று முடிவெடுத்தனர். இந்த முறை பல்வேறு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் எரிவாயு தகனமேடை ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. பழைய துருப்பிடித்த இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சில நாட்களில் பயன்பாட்டிற்கு வருவதாக ஆணையர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். இது போலவே கடலூர் கம்மியம்பேட்டை எரிவாயு தகனமேடையும் இனி சமையல் எரிவாயு மூலம் பிரேதங்களை எரிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED லாப நோக்கில் கணக்கீடு மின் கட்டணம் 10 மடங்கு உயர்வு: மக்கள் கடும் கண்டனம்