×

விழுப்புரம் காவல் உட்கோட்டம் 2ஆக பிரிகிறது

விழுப்புரம், மார்ச் 13: விழுப்புரம் மாவட்டத்தில் 13 காவல் நிலையங்களைக் கொண்டுள்ள  விழுப்புரம் காவல் உட்கோட்டம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. நடைபெறும்  பட்ஜெட்தொடரில், காவல்துறை மானிய கோரிக்கை அன்று இதுகுறித்த  அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு,  குற்றங்களை தடுத்து கண்காணிக்கும்வகையில் இந்த நடவடிக்கை எடுக்க காவல்துறை  சார்பில் தமிழக அரசுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்  மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சி  புதிய மாவட்டம் சமீபத்தில் உதயமானது. முதலில் மாவட்ட எல்லைகள் வரையறை செய்வதற்கு  முன்பாக காவல்துறையின் எல்லைகள் பிரித்துக்கொள்ளப்பட்டது. அதற்காக  முன்கூட்டியே, அம்மாவட்டத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளரும்  நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி,  சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம்  ஆகிய தாலுகாவும், புதியதாக கரியாலூர் என மொத்தம் 7 வருவாய்வட்டம் உள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி,  செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம், புதியதாக  உருவாக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லூர் என மொத்தம் 9 தாலுகா அமைந்துள்ளது.

மாவட்ட  எல்லைகள் பிரிப்பு, தாலுகா பிரிப்பைபொறுத்து, காவல் எல்லை வரம்பும்  மாற்றமடைந்துள்ளது. ஏற்கனவே இருந்த ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில்  விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி,  திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை என 7 காவல்உட்கோட்டங்களும், அதன்கீழ் 49  காவல்நிலையங்களும் செயல்பட்டுவந்தன. தற்போது புதிதாக  பிரிக்கப்பட்ட  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை,  கள்ளக்குறிச்சி ஆகிய 3 காவல் உட்கோட்டங்களளும் இடம்பெற்றுள்ளன. இந்த  உட்கோட்டங்களின் கீழ் 22 காவல்நிலையங்கள் வந்தாலும், 19 காவல்நிலையங்கள்  மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைவரம்பில் அமைந்துள்ளன. மீதமுள்ள  திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர் காவல்நிலையங்கள்  விழுப்புரம் மாவட்ட காவல் எல்லைவரம்பில் வருகின்றன. இதனால், இந்த  மூன்று காவல்நிலையங்களையும் விழுப்புரம் மாவட்டத்தோடு இணைத்து, விழுப்புரம்  உட்கோட்ட காவல்எல்லைக்குள் கொண்டுவரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே, விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில், விழுப்புரம் மேற்கு, நகரம்,  தாலுகா காவல்நிலையங்களும், போக்குவரத்து பிரிவு, அனைத்துமகளிர் காவல்நிலையம்,  வளவனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, பெரியதச்சூர், விக்கிரவாண்டி  போக்குவரத்து பிரிவு என மொத்தம் 10 காவல்நிலையங்கள் விழுப்புரம்  காவல் உட்கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

அதிகளவு  காவல்நிலையங்களை கொண்டுள்ள மிகப்பெரிய கோட்டமாக இருப்பதால்  சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்புகள், காவல்நிலையங்களின் செயல்பாடுகள்,  அன்றாட நடைமுறைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதில் பெரும் சிரமம்  இருந்து வருகிறது. இந்நிலையில், கூடுதலாக மேலும் மூன்று  பெரிய காவல்நிலையங்களை சேர்த்திருப்பதால் மேலும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. தலைநகரில்  தினசரி நடைபெறும் போராட்டம், ஆர்ப்பாட்டம் மட்டுமின்றி, மணல் கடத்தல்,  சாராயம், ரவுடியிசம் போன்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள் மிக்க இந்த  உட்கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. காவல்துறை  அதிகாரிகளின் பணிச்சுமையை கருத்தில் கொண்டும், சிறந்த காவல்துறை நிர்வாகத்தை  வெளிப்படுத்தும் வகையிலும் விழுப்புரம் காவல்உட்கோட்டத்தை இரண்டாக  பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்தது. இது குறித்து, மாவட்ட காவல்துறை  சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கையும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி,  திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி,  பெரியதச்சூர், விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்நிலையத்தை உள்ளடக்கி  தனிகாவல் கோட்டம் உருவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 விக்கிரவாண்டியை  தலைமையிடமாகக்கொண்டு இந்த புதிய காவல்உட்கோட்டம் உருவாக்கப்படலாம் என்றும்,  சட்டமன்றத்தொகுதி, புதியநீதிமன்றம், போக்குவரத்திற்கு எளிதாக  நான்குவழிச்சாலை என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதால் விக்கிரவாண்டியில்  இந்த புதிய காவல்உட்கோட்ட அலுவலகம் துவங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று  கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரி ஒருவர்கூறுகையில்,  தமிழகசட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம்  வரும் 26, 27ம் தேதியன்று நடக்கிறது. அன்று  தமிழக முதல்வரால்  அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

Tags : Villupuram ,police division ,
× RELATED விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக்...