×

ஆண் குழந்தை பிறந்தால் ₹4 ஆயிரம் லஞ்சம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 13:  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ஆண்  குழந்தை பிறந்தால் ரூ.4 ஆயிரமும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.3 ஆயிரமும்  கேட்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் ஆபாசமாக பேசுவதுடன்,  சரிவர சிகிச்சை அளிப்பதில்லை என நுகர்வோர் பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டம் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் சார்ஆட்சியர் ஸ்ரீகாந்த்  தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நுகர்வோர் விழிப்புணர்வு  சங்க செயலாளர் அருண்கென்னடி பேசியதாவது:கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைகள்  அனைத்தும் சுடுகாட்டில் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம்  வீசுகிறது. இதனால் சடலத்தை அடக்கம் செய்ய செல்பவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட  வாய்ப்புள்ளது. எனவே கள்ளக்குறிச்சி ஊருக்கு ஒதுக்குப்புறமாக புறம்போக்கு  இடத்தை தேர்வு செய்து குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகிய நீர்பிடிப்பு பகுதிகளில் மீன் கழிவுகள், கோழிக் கழிவுகள், மாட்டு  கழிவுகளை கொட்டி நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றனர். எனவே இதுகுறித்து கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் ஆண்  குழந்தை பிறந்தால் ரூ.4000, பெண் குழந்தை பிறந்தால் ரூ.3000  கேட்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் ஆபாசமாக பேசுவதுடன்,  சரிவர சிகிச்சை அளிப்பதில்லை. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியான  காய்கறி மார்க்கெட், சிவன்கோவில் தெரு, ராஜா நகர் ஆகிய பகுதியில் ஆக்கிரமிப்பு  அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதேபோல் மற்ற நுகர்வோர்  நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இறுதியாக சார் ஆட்சியர்  ஸ்ரீகாந்த் பேசுகையில், நுகர்வோர் அமைப்பினர் குறிப்பிட்டுள்ள புகார்கள்  மற்றும் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்  ரவிச்சந்திரன், உதவி மின்பொறியாளர் சுரேஷ்குமார், இளநிலை தர ஆய்வாளர்  பாலசுப்ரமணியன், போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சுப்ரமணியன், நுகர்வோர்  சங்க தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தெலுங்கானா மாநிலம் மேதக்...