×

காரியாபட்டியில் அலுவலக பணியாளர்கள் இல்லாத அரசு பள்ளி ஆசிரியர்களே பணிகளைச் செய்வதால் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் சிக்கல்

காரியாபட்டி, மார்ச் 13: காரியாபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அலுவலக பணியாளர்கள் இல்லாததால் ஆசிரியர்களே அப்பணிகளை செய்கின்றனர். இதனால் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காரியாபட்டியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், நீர்க்கொணர்பவர், துப்புரவு பணியாளர்கள் என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாளர்கள் இல்லாததால் அப்பணிகளை ஆசிரியர்களே செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் தேர்வு மையத்தை தயார்படுத்தும் பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களே இப்பணிகளை செய்ய வேண்டிய நிலையில் சிரமத்தில் உள்ளனர். அத்துடன் இப்பள்ளியைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தேர்வெழுத வருவார்கள். அவர்களுக்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இப்பள்ளியில் உள்ள மாணவிகளுக்ேக போதிய பெஞ்ச், டெஸ்க்குகள் கிடையாது. தற்போது வெளியிலிருந்து வரும் மாணவர்களுக்கும் பெஞ்ச், டெஸ்க், லேப் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆசிரியர்களின் சம்பள பில் தயார் செய்வது, கருவூலம் செல்லவும் ஆசிரியர்களை அனுப்ப வேண்டிய நிலையுள்ளது. ஆசிரியைகளை கொண்டு இப்பணிகளை செய்வதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை கொடுப்பதால், அவர்கள் சோர்வடைவதோடு தலைமை ஆசிரியை மீது எரிச்சலடைகின்றனர். தங்கள்படும் சிரமங்கள் குறித்து பலமுறை அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லையென ஆசிரியர்கள் மனம் நொந்து போய் உள்ளனர்.தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சியை பெற்று வரும் இப்பள்ளிக்கு தேவையான அலுவலகப் பணியாளர்கள் இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது. மேலும் நன்றாக செயல்பட்டு வந்த நாட்டு நலப்பணித் திட்டம் அதற்கான ஆசிரியர் இல்லாமல் போனதால் இப்பள்ளியில் இத்திட்டம் மூடப்பட்டது. எனவே, உரிய பணியாளர்களை நியமனம் செய்து மாணவிகளின் கல்வி தரத்தை தொடர்ந்து முதலிடத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : school teachers ,office staff ,election ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து...