×

சிவகாசி பஸ்நிலையம் முன்பு காட்சி பொருளான சிக்னலால் நெருக்கடி

சிவகாசி,மார்ச் 13: சிவகாசி பஸ்நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளதால் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சிவகாசி பஸ்நிலையம் முன்பு சாத்தூர், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பணியில் இல்லாத நேரத்தில் இங்கு நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றும் முந்தி செல்ல முயலும் போது அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. பஸ்நிலையத்தில் இருந்து பஜார் பகுதிக்குள் நடந்து செல்லும் மக்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டனர். பஸ்நிலையம் முன்புள்ள சந்திப்பு சாலையில் போக்குவரத்தை நிரந்தரமாக கட்டுப்படுத்த தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சிக்னல்கள் செயல்படாமல் காட்சி பொருளாக நிற்கிறது. இதனால் போலீசார் பணியில் இல்லாத நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த சாலையை கடந்து செல்ல முடிவதில்லை.

சிவகாசி பஸ்நிலையம் முன்பு ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், லாட்ஜ், கடைகள் அதிகம் உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் சாலையில் கடுமையான இட நெருக்கடி ஏற்படுவதால் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. பஸ்நிலையம் முன்புள்ள வணிக நிறுவனங்கள் முன்பு வாகனத்தை நிறுத்த தடை விதிக்கவும், செயல்படாத சிக்னல்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi Bus Stand ,commodity signal crisis ,
× RELATED வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.55 கோடி மோசடி: 2 பேர் கைது